இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இறைவனுக்காக பெற்ற மகனையே பலியிட முன்வந்த இப்ராஹிமின் தியாகத்தையும், இறைவனுக்காக தன்னையே பலிகொடுக்க முன்வந்த இஸ்மாயிலின் தியாகத்தையும் போற்றும் விதமாக தியாகப் பெருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


பக்ரீத் பண்டிகை:


பக்ரீத் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்து பக்ரீத்தை கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாகவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.


சேலம் வாரச்சந்தையில் மட்டும் ஆடுகள் விற்பனை சுமார் 1 கோடி அளவிற்கு நடைபெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடு, கோழி மற்றும் மாடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகளவில் நடைபெற்று வருகிறது.


ஆடுகள் விற்பனை படுஜோர்:


ராணிப்பேட்டை வாரச்சந்தையில் அதிகளவு விற்பனை நடைபெறும் என்பதால் திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், ராணிப்பேட்டை ஆந்திர மாநில எல்லை அருகே இருப்பதால் ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து விற்பனையில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ராணிப்பேட்டை வாரச்சந்தை போல பொள்ளாச்சி வாரச்சந்தையும் மிகவும் பிரபலமான வர்த்தக நிலையம் ஆகும். இங்கு நடக்கும் வாரச்சந்தையில் பொருட்களை வாங்கவும், விற்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்த முறை பக்ரீத் என்பதால் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.


கோடிக்கணக்கில் வர்த்தகம்:


பொள்ளாச்சி சந்தையில் மட்டும் சுமார் 1200 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்கள் அதன் எடைக்கு ஏற்பவும், வகைக்கு ஏற்பவும் விலை மாறுபட்டது.


தென் மாவட்டமான மதுரையில் உள்ள திருமங்கலம் வாரச்சந்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது. அதிகாலை 4 மணி முதலே ஆடுகள் விற்பனை திருமங்கலத்தில் களை கட்டத் தொடங்கியது. இதனால், மிக வேகமாக ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருமங்கலம் வாரச்சந்தையில் மட்டும் ரூபாய் 3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனையாகியது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள், கோழிகள் மற்றும் மாடுகளை இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், வழக்கத்தை விட அதிகளவில் மக்கள் ஆடு, கோழிகளை வாங்க குவிந்தனர். அதிகாலை முதலே நடைபெற்று வந்த ஆடுகள் விற்பனை சுமார் 8 கோடி ரூபாய் வரை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வியாபாரிகள் மகிழ்ச்சி:


இதுமட்டுமின்றி திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் என தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரபலமான சந்தைகளிலும் பக்ரீத் பண்டிகை காரணமாக வழக்கத்தை விட பன்மடங்கு ஆடுகள், கோழிகள் மற்றும் மாடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.


நாளை பக்ரீத் பண்டிகை என்பதால், வாரச்சந்தைகளில் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பல இடங்களில் ஆடுகள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களில் மட்டும் பக்ரீத் பண்டிகை காரணமாக சுமார் 10 கோடிக்கும் அதிகமான அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகளும், கால்நடை வளர்ப்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.