விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல், முதல் நாள் காட்சி நடிகர் விஜய்யை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 


கிழக்கு வாசல் சீரியல் 


வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடிகை ராதிகா அசத்தி வருகிறார். நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் அவர் சின்னத்திரையில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். அந்த வகையில் தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் நேற்று (ஆகஸ்ட் 7) முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


விஜய்யை மையமாக வைத்து காட்சிகளா?


நேற்று ஒளிபரப்பான இந்த சீரியலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமியப்பன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் அவரது முதல் காட்சியின் வசனமே நடிகர் விஜய்யை மையப்படுத்தி இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, மறைந்த தனது பெற்றோர்கள் முன் நின்று “அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் என்ன வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க என்று அப்ப எனக்கு புரியலை.  வயசாக வயசாக தான் உங்க அருமை எனக்கு புரியுது. பெற்றோரோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை. எல்லா பிள்ளைகளும் அப்படித்தான். நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னைக்கு எனக்கு 60 வயசு பூர்த்தி ஆகுது. இப்ப இருக்க ஞானம் 30 வயசுல எனக்கு இருந்திருந்தால் உங்களை நான் நல்லா வச்சு பார்த்திருப்பேன்' என தெரிவிக்கிறார்.



ஏற்கனவே நடிகர் விஜய்க்கும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இருவரும் பேசிக் கொள்வதில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ‘பெற்றோரோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை’ என்ற வசனம் விஜய்க்காக வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீரியலின் முதல் காட்சியே எஸ்.ஏ.சி.,க்கு 60வது கல்யாண நிகழ்வை மையப்படுத்தியதாக உள்ளது.


ஆனால்  எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆயுஷ் ஹோமம் நடத்தினார். இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிகழ்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.