மதுரை மாவட்டம், டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தவர் முத்து, தன்னுடைய பெயருடன் சொந்த ஊரின் பெயரையும் இணைத்து கொண்டு, மதுரை முத்து என தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு, நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமான இவர், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அசத்த போவது யாரு, ஞாயிறு கலாட்டா, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சி மூலமாகவும் பிரபலமானார்.
மதுரை முத்து மனைவி லோகாவின் மரணம்:
வெளிநாடுகளிலும் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, அதன் மூலம் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபலமாக உள்ளார். அழகான மனைவி - 2 பெண் குழந்தைகள் என, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கையை அடியோடு திருப்பி போட்டது மனைவிக்கு நடந்த விபத்து. மதுரை முத்துவின் மனைவி லேகா என்ற வையம்மாள், மதுரைக்கு சென்று விட்டு சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 2016-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை தனியாக வளர்க்க சிரமப்பட்ட மதுரை முத்து, தனது மனைவி லோகாவின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நீத்து மூலம் மதுரை முத்துவுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
மனைவி மற்றும் அப்பா அம்மாவுக்கு கோவில் கட்டும் மதுரை முத்து:
அண்மையில் சென்னையில் புதிய வீடு ஒன்றை கட்டி குடியேறிய மதுரை முத்து, இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா? என்கிற சர்ச்சை வந்து ஓய்ந்தது. மதுரை முத்து மனைவி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த சர்ச்சைக்கு வழிவகுத்தது. ஆனால் இந்த வதந்தி குறித்து மதுரை முத்து தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை .
தற்போது மதுரை முத்து, மறைந்த மனைவி லோகா மற்றும் தன்னுடைய தாய் - தந்தைக்கு சொந்த ஊரான மதுரையில் உள்ள வீட்டில், கோவில் கட்டி வருகிறார். இதுகுறித்த அறிவிப்பை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். மறைந்த மனைவி லோகாவை மதுரை முத்து எந்த அளவுக்கு நேசித்துள்ளார் என்பது அவரின் இந்த செயல் நிரூபித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.