School Leave: கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிக்ளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


வானிலை மையம் எச்சரிக்கை:


மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இன்று மேற்கு- வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக


எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு:


11-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


12-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


13-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


14-12-2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமான பலத்த மழை பொழிவுக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.