TN Govt CAG Report: பட்டியலின மக்கள் இன்றளவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும், அவர்களுக்கான நிதி செலவிடப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் சிஏஜி அறிக்கை:
கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலால் வழங்கப்படும் தமிழ்நாடு நிதிநிலை தொடர்பான, சிஏஜி அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 2018-19 முதல் 2022-23 நிதியாண்டு வரையிலான தமிழக அரசின், வரவு-செலவு திட்ட மேலாண்மை, வருவாய், பற்றாக்குறை உள்ளிட்ட நிதி தொடர்பான விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் மகிழ்ச்சி அளித்தாலும், பல தகவல்கள் அரசிடம் முறையான திட்டமிடல் இல்லையோ என்ற கேள்வியையே எழுப்புகிறது.
முன்னேற்றப்பாதையில் தமிழ்நாடு
அறிக்கையின்படி, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்களிப்பு அதிகரித்ததன் காரணமாக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட சுமார் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசின் வருவாய் அதிகரித்துள்ளால், 2022-23இல் மாநில அரசின் வளங்கள் 17.47 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுக் கடன் 2018-19 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 15.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
குவிந்து கிடக்கும் கடன்:
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) ரூ.1.35 லட்சம் கோடி கடன் பொறுப்பில் உள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் பொறுப்பு ரூ.1.79 லட்சம் கோடியில், 75% கடன் டான்ஜெட்கோ அமைப்பின் மீது உள்ளது. டான்ஜெட்கோ நிறுவனத்தின் நிலுவைக் கடனாக 89,098 கோடி ரூபாய் காட்டப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழக போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் கடந்த 7 ஆண்டுகளில் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத ரூ.1000 கோடி
இதனிடையே, தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,000 கோடிக்கும் மேல் செலவழிக்கப்படாமல் இருந்துள்ளது. இது அரசிடம் போதுமான நிதிக் கட்டுப்பாடு இல்லாததைக் குறிக்கிறது. அரசின் பல்வேறு துறைகளில் முன்பணமாக செலவிடப்பட்ட ரூ.14.73 கோடி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் சரிகட்டப்படாமல் இருப்பதும் சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சமூகநீதி வளர்ச்சி எங்கே?
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அனைவருக்குமான வளர்ச்சி திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், இன்றளவும் பட்டியிலன மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து கொண்டு தான் இருக்கின்றனர். சரியான இருப்பிடம், தரமான உணவு, முறையான கல்வி என்பது இன்னும் ஏராளமானோருக்கு எட்டா கனியாகவே உள்ளது. அதேநேரம், பழங்குடியின மக்களுக்கு, மின்சாரம், மருத்துவம், சாலை மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் கூட கேள்விக்குறியாகவே தொடர்கிறது. இதனால், பல நேரங்களில் உயிரிழப்புகள் நிகழ்வதையும் காணமுடிகிறது. அப்படி இருந்தும் ஒதுக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாதன் காரணம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. முறையான திட்டமிடல் இல்லையா? பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் இல்லையா? அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசுக்கு பணம் இருந்தும் மனம் இல்லையா? என்ற அதிருப்தியும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
1000 கோடி ரூபாயை முறையாக செலவழித்து இருந்தால், இந்நேரம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரமே மேலோங்கி நின்று இருக்கும். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஒதுக்கப்பட்ட நிதி கருவூலத்திலேயே தூங்கிக் கிடப்பது யாருக்கு பலன் என்பதை அரசே சிந்தித்து செயல்பட வேண்டும்.