விஜயகாந்த்


தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இப்படியான நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.  அவரது இறப்பு தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . விஜயகாந்தை ஆதர்சமாகக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தேமுதிக அலுவலகத்தில் அடக்கத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.


விஜயகாந்தின் மறைவை அனுசரிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நேற்று திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கார்த்திருந்த விஜய நடித்து வரும் தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.


கண் கலங்கிய விஜய்


கேப்டன் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்த நடிகர் விஜய்  கண் கலங்கி நிற்கும் காட்சிகள் அனைவரின் மனதையும் கலங்கடித்துள்ளது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய்யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் விஜயகாந்த். இந்த இழப்பு நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட ரீதியில் மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள நிலையில், தற்போது தான் நடித்து வரும் தளபதி 68 படத்தின் அப்டேட்களை இன்னும் சில நாட்களுக்கு ஒத்திப்போட விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக புத்தாண்டு தினத்தன்று தளபதி 68 அப்டேட் வருவதாகத் தகவல்கள் வெளியாகின.


தளபதி 68


வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் விஜய், பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, மீனாக்‌ஷி செளதரி, சினேகா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாக ஜனவரி 1 ஆம் தேதிக்காக காத்திருந்தார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் விஜயகாந்த் மறைவால் வருந்தும்  நிலையில் தனது படத்தின் அப்டேட்களை சில நாட்கள் கழித்து வெளியிட விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.