விஜயகாந்த்
இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்காந்த் அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .
விஜய்காந்தின் திரைப் பயணம்
ஒரு நடிகராக தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரையில் இணைந்து நடித்துள்ளார் விஜயகாந்த். அப்படி அவர் நடித்த படங்களைப் பார்க்கலாம்.
ரஜினிகாந்த்
விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்து வந்த ரஜினிகாந்த் " மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய உள்ளது. நட்புக்கு இலக்கணமாக இருந்தவர். அவருடன் ஒரு முறை பழகிவிட்டால் வாழ்க்கையில் அதனை மறக்க முடியாது. நண்பர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் கோபப்படக்கூடியவர். ஆனால் அவர் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கும். அந்த கோபத்திற்கு பின்னால் ஒரு அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியமானவர், வீரமானவர்" என்று கூறினார்
ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படங்கள்
ரஜினிகாந்துடன் முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு வெளியான தாய் வீடு படத்தில் நடித்தார் விஜயகாந்த். இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் , சட்டம் ஒரு விளையாட்டு உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சினிமாவில் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்த கமல்ஹாசன் துரதிஷ்டவசமாக ஒரே ஒரு படம் மட்டுமே இணைந்து நடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான மனக்கணக்கு படத்தில் விஜயகாந்த் ராதா நடித்திருக்க ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
விஜயகாந்த் - பிரபு
நடிகர் பிரபுவுடன் காலையும் நீயே மாலையும் நீயே, நம்பினார் கெடுவதில்லை உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்
விஜயகாந்த் - சத்யராஜ்
விஜயகாந்த் சத்ய்ராஜ் கூட்டணியில் மொத்தம் ஒன்பது படங்கள் வெளியாகி இருக்கின்றன. நூறாவது நாள், ஜனவரி 1 , நாளை உனது நாள், சந்தோஷ கனவுகள், ராமன் ஸ்ரீராமன், மனதில் உறுதி வேண்டும் , ஈட்டு , கருமேடு கருவாயன், சுயம்வரம் உள்ளிட்டப் படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்