திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரிக்குறவர் இனத்தை சார்ந்த நபர்களை, விவசாய தோட்டப்பகுதியை சார்ந்தவர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டையன், குமார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் ஊசிபாசிகளை தயார் செய்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தனர். மேலும் இருவரும் சில சமயங்களில் காடை, குருவி, கொக்கு போன்ற குருவிகளையும், பறவைகளையும் உண்டி வில் மூலம் வேட்டையாடுவதும் உண்டு. இந்த நிலையில் வேட்டைக்காக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்த சேரன் நகர்ப் பகுதிக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.




அங்கு தோட்டத்துப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களைப் பார்த்து கோழிகள் சத்தமிட்டபடி ஓடி உள்ளன. செங்கோட்டையனும், குமாரும் கோழிகளைத்தான் திருட வந்ததாக எண்ணி, அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். கோழிகளைத் திருட வரவில்லை என இருவரும் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அதைக் கேட்காமல் செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரையும் அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து, கட்டைகளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த செங்கோட்டையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் உடல் உடற்கூராய்விற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொடுர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உடுமலைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.