விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி-68(Thalapathy 68) படத்தை வெங்கட் பிரபு(Venkat Prabhu) இயக்க உள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா(Yuvan Shankar Raja) இசையமைக்க உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய் வெளியிட்ட வீடியோ:
இதுதொடர்பாக நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சுடோகு போன்ற ஒரு கட்டத்தின் மூலம், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 25 திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், புதிய கீதை திரைப்படத்திற்குப் பிறகும் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா உடன் சேர்ந்து விஜய் முதல் முறையாக பணியாற்ற உள்ளார். முன்னதாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான, பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68:
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துவிட்டது. லியோ பட வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டே பட ஷூட்டிங் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கோலிவுட் வட்டாரத்தில் எழுந்து வந்தன. தளபதி 68 படத்தை இந்த இயக்குநர் தான் இயக்குவார் எனப் பலரது பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த படத்தை, வெங்கட் பிரபு இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
”மாநாடு”-வின் தாக்கம்:
கடந்த 2021ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து, விஜய் அல்லது அஜித் படங்களை வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மன்மத லீலை, கஸ்டடி என வளரும் நடிகர்களின் படங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த இயக்குநர் ஆகியுள்ளார். மேலும் வெங்கட் பிரபுவின் ஹிட் கூட்டணியான யுவன் ஷங்கர் ராஜாவே இந்தப் படத்துக்கும் இசையமைக்க உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் புரமோஷன் செய்த விதம் தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இதனால், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.