விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ’லியோ’ படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’லியோ’ படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு
’லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், 50 நாள்களைக் கடந்து காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
தனது ட்வீட் உடன் வீடியோ ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள நிலையில், பனி, குளிர், மழை, இரவு, பகல் பார்க்காமல் மைனஸ் 6 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரையிலான கடுங்குளிரில் படக்குழுவினர் முழுவீச்சில் ஷூட்டிங்கில் ஈடுப்பட்டுள்ள காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் 68ஆவது படமான லியோ படத்தில் த்ரிஷா, நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், நடிகை ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், முதற்கட்ட காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது.
உறைய வைக்கும் பனியில் படப்பிடிப்பு
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு சண்டைப்பயிற்சியாளராகவும், தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ப்ரொடக்ஷன், கேமரா, ஆடை வடிவமைப்பு, ஸ்டண்ட் என படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் அனுபவங்கள், சிரமங்கள் என அனைத்தையும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் இறுதியாக நடிகர் விஜய் ஷூட்டிங் தளத்தில் துள்ளிக் குதித்தோடும் காட்சிகளும், காஷ்மீரில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் விஜய் உரையாடும் காட்சிகளும் இடம்பெற்று விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் நிலையில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.சி.யூ படமா?
‘விக்ரம்’ படத்தின் வரிசையில் ‘லியோ’ திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யூவின் ஒரு அங்கமாக இருக்கும் என முன்னதாககத் தகவல்கள் வந்த நிலையில், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இன்று மதியம் படக்குழுவினர் அனைவரும் சென்னை கிளம்பியதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், வட இந்திய மாநிலங்களில் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக லியோ படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக இயக்குநர்கள் கௌதம் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரது பிறந்தநாளும் படப்பிடிப்புத் தளங்களில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.