விஜய் பிறந்தநாள்
நடிகர் விஜயின் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ஆம் தேது வரவிருக்கிறது. ஒருபக்கம் அரசியல் கட்சிப் பணிகள் இன்னொரு பக்கம் நடிப்பு என இயங்கிவரும் விஜயின் இந்த பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட காத்திருக்கிறார்கள். இதே நாளில் விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தி கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது போலவே இந்த ஆண்டு ஜன நாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஜனநாயகன் அப்டேட்
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்லது. பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜன நாயகன் விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும். இந்த படத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்டு முழு அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய். இந்த படம் விஜய்க்கு ஒரு சிறப்பான ஃபேர்வெல் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஜன நாயகன் பட்ஜெட்
ஜன நாயகன் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 400 கோடி என கூறப்படுகிறது. இதில் விஜயின் சம்பளம் ரூ 275 கோடியாகும். கடந்த மே மாதம் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் முடிவு செய்தார் விஜய்.
இந்த படத்தின் விநியோக உரிமையை ஏற்கனவே Seven Screens Studio நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் ஃபிலிம் நிறுவனம் ரூ.78 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து விநியோக உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.கடும் போட்டிகளுக்கிடையே, ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, 8 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.