தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி இந்திப்படங்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் பேசத் தயங்கிய ராஷ்மிகா:
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தபோது நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது, ராஷ்மிகா மந்தனா பேசியபோது அவரிடம் தமிழில் பேசுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ராஷ்மிகா மந்தனா இங்க வந்து தமிழில் பேசினால் இந்தி மீடியாவுக்கு நான் என்ன பேசுறேனு புரியாது என்றார்.
தமிழில் பேசிய தனுஷ்:
அதற்கு அடுத்து பேசிய தனுஷ் ஓம் நமசிவாய. எல்லாருக்கும் வணக்கம் என்று தமிழிலே பேசத் தொடங்குவார். உங்கள் எல்லாரையும் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்காக இங்க வந்துருக்கீங்க. இங்க வந்ததுக்கு ராெம்ப நன்றி. எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. என்னால ஆங்கிலத்தில்தான் பேச முடியும். அதுவும் கொஞ்சம் கொஞ்சம்.
என்று பேசினார்.
இந்த விவகாரத்தில் ராஷ்மிகாவை விமர்சித்தும், தமிழில் பேசி அசத்திய தனுஷை பாராட்டியும் இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்தி திணிப்பு விவகாரம்:
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக வலுவான முழக்கங்கள் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீது வட இந்தியாவைச் சேர்ந்த பல தலைவர்களும் விமர்சனத்தை முன்வைப்பதும் உண்டு. அதேசமயம், பாலிவுட் நடிகர்கள் தென்னிந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றால் இந்தியிலே பெரும்பாலும் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியை தேசிய மொழி என்று பலரும் கூறிவருவதற்கும் தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ளது.
குபேரா சிறப்பு வாய்ந்த படம்:
மேலும், தொடர்ந்து பேசிய தனுஷ், "குபேரா மிகவும் வித்தியாசமான படம். எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். இது ஒன்றும் சாதாரண படமும் அல்ல, சாதாரண நிகழ்வும் அல்ல. இது மிக மிக சிறப்பு வாய்ந்தது. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் குபேரா. எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நெருக்கமான படம். அவர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்த படத்தில் நடித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. குப்பைக்கூடங்களில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுத்தரும். நல்ல திறமையான மற்றும் நேர்மறையான அணியுடன் இணைந்து பணியாற்றினோம். இதுபோன்று விளம்பரம் செய்வதற்கு குபேரா படம் மிகவும் தகுதி வாய்ந்த படம் ஆகும்.
பிச்சைக்காரன்:
நான் இந்த படத்தில் ஒரு பிச்சைக்காரனாக நடித்துள்ளேன். இதற்காக நிறைய ஆய்வு செய்தேன். பயிற்சியும் செய்தேன் என்று சொன்னால் அத்தனையும் பொய். நான் படப்பிடிப்புக்கு சென்று இயக்குனர் சொன்னதை பின்பற்றினேன். சேகர் மிகவும் திறமையான இயக்குனர்.
சேகர் மிவும் திறமையானவர். அவர் எனக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுத்தந்தார். அவர் என் கதாபாத்திரத்தை மிகவும் எளிதாக்கினார். நான் இதுவரை நடித்ததிலே மிகவும் வித்தியாசமான படம், மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம். இந்த சவால்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு நடித்தேன். "
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.