சூர்யா சேதுபதி
தமிழ், தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. நடிப்பு தவிர்த்து இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முதல் எபோசோடே ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. விஜய் சேதுபதிக்கு அடுத்து அவரது மகன் சூர்ய சேதுபதி சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படத்துடன் இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.
சூர்யா சேதுபதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
முன்பு பீனிக்ஸ் படத்தின் அறிவிப்பின் போது சூர்யா பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்தது. தனது தந்தையின் செல்வாக்கால் தான் அவருக்கு இந்த பட வாய்ப்பு அமைந்ததா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அவர் ' அப்பா வேற நான் வேற. போஸ்டரில் கூட சூர்யா என்று நான் போட்டிருக்கிறோம். சூர்யா சேதுபதி என்று போடவில்லை" என்று கூறினார். தந்தை பிரபலமாக இல்லாமல் இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டதா என்று அவர் பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா சேதுபதியின் மற்றொரு கருத்து சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்படுகிறது. " நான் சின்ன வயசுல இருந்து கஷடப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுப்பார். அதனாலதான் சினிமாவுல ஜெயிக்கனும்னு வந்திருக்கேன்" என்று சூர்யா சேதுபதி கூறியதாக ஒரு கருத்து வலம் வருகிறது.
இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் ' ஐயோ ரொம்ப கஷ்டப்படுற குடும்பமா இருக்கும் போல ' , " அப்போ மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் தருவாங்களா" என்று சூர்யாவை ட்ரோல் வருகிறார்கள்.