2024ஆம் ஆண்டு நடத்திய 10 விதமான போட்டித் தேர்வுகளுக்கும் ஒரு வாரத்துக்குள்ளாகவே தற்காலிக விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


முன்னதாக, டிஎன்பிஎஸ்சி செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வந்தனர்.


டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்


இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆசுப் பணியாளர் தேர்வாணையத்தில் செயல்கள் வேகப்படுத்தப்படும் என்றும் தேர்வு செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் முறையாக நடைபெறும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.


2019ஆம் ஆண்டு முதல் 2024 வரை பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற குரூப் 1, குரூப் 5 உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள், வெற்றி பெற்ற தேர்வர்களின் முக்கிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளிப்படையாக வெளியிட்டது.


தேர்வு விவரங்கள் வெளியீடு


இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி படிப்பு தகுதி, பதிவு எண், ரேங்க், மதிப்பெண், சமூகப் பிரிவு, தேர்வு பிரிவு, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியாகி இருந்தன. அதேபோல முதன்மைத் தேர்வு கட்- ஆஃப் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெற்ற கட்- ஆஃப் மதிப்பெண்கள், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் ஆகிய விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது பாராட்டுகளைக் குவித்தது. 






1 வாரத்துக்குள் விடைக் குறிப்புகள்


இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நடத்திய 10 விதமான போட்டித் தேர்வுகளுக்கும் ஒரு வாரத்துக்குள்ளாகவே  Tentative answer key எனப்படும் தற்காலிக விடைக் குறிப்பை வெளியிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 7 முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்ற 10 விதமான தேர்வுகளுக்கு 5 முதல் 7 நாட்களில் தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட முக்கியமான தேர்வுகளும் அடக்கம். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியின் இத்தகைய முன்னெடுப்புக்குத் தேர்வர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதையும் வாசிக்கலாம்: சபாஷ்: போட்டித் தேர்வுகள், வெற்றிபெற்றோரின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- விவரம்!