இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாக உள்ளது. புத்தாண்டைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நெருங்கும் தீீபாவளி:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு நிகராக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதை தமிழ்நாட்டில் வழக்கமாக வைத்துள்ளனர்.
நடப்பாணடில் தீபாவளி அக்டோபர் 31ம் தேதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகள் வாங்குவதையும், பட்டாசுகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புத்தாடைகள் விற்பனை அமோகம்:
இதன் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள வர்த்தக மையங்கள், கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தாடைகளின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூரில் 24 மணி நேரமும் தீபாவளிக்காக தீவிரமாக ஆடைகள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையின் முக்கிய வர்த்தக நகரமான தி.நகரில் உளள பிரபல ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட பன்மடங்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. புத்தாடைகளை வாங்குவதற்காக மக்கள் குவிந்ததால் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்கள் அதிகளவு குவிந்ததால் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு விற்பனை படுஜோர்:
மேலும், தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் இல்லாமல் நிறைவடையாது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று பட்டாசுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பல இடங்களில் பட்டாசுகள் விற்பனைக்காக சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த இடங்களில் மக்கள் திரளாக குவிந்து வாங்கினர்.
பட்டாசு தயாரிக்கும் இடமான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தியும் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலைகளில் உற்பத்தியாகும் பட்டாசுகளும் வெளியூர்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும் மும்முரமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், புத்தாடைகளும் மொத்த வியாபாரமாகவும், சில்லறை வியாபாரமாகவும் தீவிரமாக விற்பனையாகி வருகிறது.
அடுத்த ஒரு வாரத்திற்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளின் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தீபாவளிக்கான பட்டாசு மற்றும் புத்தாடைகள் வர்த்தகம் மட்டுமே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.