எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று தான் எப்படி தேர்வு செய்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள. மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மும்பை. சென்னை என இரு நகரங்களிலுல் மெரி கிறிஸ்துமஸ் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை முன்னதாக சந்தித்துப் பேசினர். இதில் பத்திரிகையாளர்களின் சில கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தும் சில கேள்விகளுக்கு கடுப்பாகியும் பதில் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.
முன்னதாக இவ்வளவு பெரிய ஸ்டாராக இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “ஒரு நடிகர் ஒரு படைப்பாளியின் கதையை சொல்வதற்கு ஒரு கருவியாக பயன்படுபவர். ஸ்டார் என்றால் நடிக்கத் தேவையில்லையா?” என்று சீற்றத்துடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் அப்போது “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கனுமா வேண்டாமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது? முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” என்றார்.
படங்களை எப்படி தேர்வு செய்கிறேன்
அதேபோல் இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய் சேதுபதி தான் எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்க கூடாது என்று எப்படி தேர்வு செய்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவியை காதலித்தேன். அப்போது யாஹூ சாட்டில் தான் நாங்கள் பழகினோம்.
பழகிய 5 மாதத்திற்குள் நான் அவரிடன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். சென்னை வந்து நான் திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு முடிவு அது. அந்த முடிவை எடுக்கவே நான் பயப்படல, எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கு ஏன் பயப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ள பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.