கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அதீதமான ராகிங் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அதற்கு முதல்வரே பதில் சொல்ல வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. ராகிங் தடுப்பு உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


கடந்த காலங்களில் கல்லூரி செல்ல வேண்டும் என்றாலே, பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு உதறலும் பயமும் ஒருசேர ஏற்படும். ஏனெனில் அப்போதெல்லாம் கல்லூரி சீனியர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வது எழுதப்படாத விதியாக இருந்தது. 


இரண்டு தரப்புக்கும் இடையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ள என்று கூறப்பட்டாலும் ராகிங்கில் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்தன. இதனால் மாணவர்கள் மன உளைச்சல், உடல் காயம் அடைந்ததுடன் சிலர் தற்கொலை முடிவையும் தேடினர். இதைத் தொடர்ந்து அரசே ராகிங்குக்குக் கல்வி நிறுவனங்களில் தடை விதித்தது. எனினும் இலைமறை காய்மறையாக ஆங்காங்கே ராகிங் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


இந்த நிலையில், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அதீதமான ராகிங் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அதற்கு முதல்வரே பதில் சொல்ல வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. ராகிங் தடுப்பு உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


* ராகிங் கிரிமினல் குற்றமாகும். உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான விதிமுறைகள், 2009 சட்டத்தின்படி, ராகிங் தொடர்பான விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.


* உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழு அமைத்த விதிமுறைகளை, உயர் கல்வி நிறுவனங்களும் மையங்களும் பின்பற்ற வேண்டும்.


* மாணவ சமூகத்தில் இளையோர்கள் மற்றும் மூத்தோர்கள் மத்தியில், சுமூகமான பந்தத்தை ஏற்படுத்த வழிகாட்டிகளை உருவாக்கும் கருத்துருவை அறிமுகம் செய்ய வேண்டும்.


* ராகிங் தடுப்பு மையம் மற்றும் ராகிங் எதிர்ப்புக் குழுக்களுக்கு, சட்ட ஆலோசகர்கள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.


* ஒருவேளை அதீத ராகிங் சம்பவங்களோ, தற்கொலை வழக்குகளோ கண்டறியப்பட்டால், கல்லூரியின் முதல்வரும், பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் அழைக்கப்படுவார்கள். அவர்களே தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுவிடம் பதில் சொல்ல வேண்டும்.






அனைத்து ராகிங் தடுப்பு மையங்களும் கண்காணிப்பு மையங்களும், மரணம் அல்லது தற்கொலைக்குக் காரணமான ராகிங் தொடர்பாக காவல் விசாரணை நடைபெறும்போது குழு அமைக்க வேண்டும். இதற்காக,   ராகிங் தடுப்பு மையங்களும் கண்காணிப்பு மையங்களும் சட்ட நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும்.


இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/8529364_Antiragging-Circular.pdf