பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை, நாட்டின் பிரதமராக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று நியமித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் பிரதமராகும் பெருமை கேப்ரியல் அட்டலுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 37 வயதில் லாரன்ட் ஃபேபியஸ் பிரான்ஸ் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மிக இளம் வயதில் பிரதமராகும் அட்டல்:
தற்போது, அவரின் சாதனையை முறியடித்துள்ளார் கேப்ரியல் அட்டல். கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எலிசபெத் போர்ன், பல நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.
வரும் ஜூன் மாதம், ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரான்ஸ் அரசை நடத்தும் மிகப் பெரிய பொறுப்பு கேப்ரியல் அட்டலுக்கு கிடைத்துள்ளது. மிக குறுகிய காலக்கட்டத்தில் அரசியலில் பெரிய உயரத்துக்கு சென்றுள்ளார் கேப்ரியல் அட்டல். 10 ஆண்டுகளுக்கு முன்பு, சோசியலிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தை தொடங்கி, சுகாதாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக பதவி வகித்து வந்தார்.
திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்பாலின ஈர்ப்பாளர்:
தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் பிரதமராவது இதுவே முதல்முறை. அரசியலில் தனது குருவான அதிபர் இம்மானுவேல் மேக்ரானை போல, இடதுசாரியை சாராமல் வலதுசாரியை சாராமல் மய்யமான கொள்கையை பின்பற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அட்டல், நாடாளுமன்றத்தில் தனது விவாத திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அதிபர் மேக்ரானின் கவனம் அட்டலின் பக்கம் சென்றது. திறமையை அங்கீகரிக்கும் வகையில், இளம் வயதிலேயே அவருக்கு கல்வித்துறையில் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல், மேக்ரான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பு வகித்தார். அவரது முகம் வாக்காளர்கள் மத்தியில் பரீச்சயமாக தொடங்கியது.
தேர்தலில் வெற்றிபெற்று மேக்ரான், மீண்டும் அதிபரானதை தொடர்ந்து, நிதிநிலை அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். பின்னர், கடந்தாண்டு, ஜூலை மாதம் கல்வித்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. பள்ளிகளில் இஸ்லாமிய அபயா ஆடைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அதற்கு தடைவிதித்து பிரச்னைக்கு தீர்வு கண்டார். கருத்துக்கணிப்புகளின்படி, மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க அமைச்சராக அட்டல் வலம் வருகிறார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளரான கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.