தலைவன் தலைவி விமர்சனம்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் தலைவன் தலைவி. சூப்பர் , அட்டகாசம் என படம் வெளியான முதல் நாள் படத்திற்கு நாலா பக்கமிருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் பாசிட்டிவ்களை காட்டிலும் குறைகளே அதிகம். சில நேரங்களில் நல்ல பரங்கள் வராத வரட்சியில் நம் ரசிகர்கள் சுமாரான படத்திற்கு கூட ஹைப் ஏற்றிவிடுகிறார்கள். முதல் நாள் ஆரவாரம் எல்லாம் அடங்கிய நிலையில் தலைவன் தலைவி படத்தின் நேர்மையான விமர்சனத்தைப் பார்க்கலாம் 

கதையே இல்லாத கதை

மதுரையை மையக் கதைக்களமாக கொண்டிருக்கிறது படம். கணவன் மனைவியான ஆகாசவீரன் (விஜய் சேதுபதி) பேரரசி (நித்யா மேனன்) இடையில் பிரச்சனை ஏற்பட்டு தனது அம்மா வீட்டில் இருக்கிறார் பேரரசி. தனது கணவனுக்கு சொல்லாமல் குழந்தைக்கு குல தெய்வம் கோயிலில் மொட்டை அடிக்க செல்கிறார். ஹீரோ விஜய் சேதுபதி என்ட்ரி கொடுக்கிறார். அப்படி இவர்கள் இருவருக்கும் இடையில் என்னதான் பிரச்சனை? ஃபிளாஷ்பேக் நிகழ்காலம் என தொடர்கிறது கதை. 

ஒரு சராசரியான கணவன் மனைவி இடையில் அவர்களைச் சுற்றி இருக்கும் உறவினர்களால் ஏற்படும் அன்றாட பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து கடைசியில் அந்த தம்பதி விவாகரத்து வாங்கும் வரை செல்வதையே இப்படம் பேசுகிறது. ஹோட்டல் வைத்து நடத்தும் விஜய் சேதுபதி கோபம் வந்தால் தொண்டை கிழிய கத்தி பேசுபவராக இருக்கிறார். தன்பக்கம் தப்பே இல்லை என்றாலும் தனது மனைவியிடன் பொறுத்து போகிறார்.  மறுபக்கம் நாயகி நித்யா மேனன்  தனது மாமியாருடன் ஏற்படும் சின்ன சண்டைகளுக்கு கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். தனது கணவன் நல்லவன் என்று தெரிந்தாலும் அவர் மீது தப்பே இல்லை என்று தெரிந்தாலும் அவனிடம் கோபித்தும் கொள்கிறார். விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் தீபா சங்கர் , தங்கையாக வரும் ரோஷினி ஹரிபிரியன் வழக்கமாக சீரியலில் வரும் வில்லிகளாக வருகிறார்கள். மறுபக்கம் விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் சரவணன் , நித்யா மேனனின் தந்தையாக வரும் செம்பன் வினோத் பெரிய ரவுடிகளாக இருக்கும் போதிலும் சண்டைகளை தவிர்க்கவே பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் முரைத்துக் கொண்டிருக்கிறார் ஆர்.கே சுரேஷ். காமெடி டிராக்கிற்கு யோகிபாபுவை ஒரு சின்ன லாஜிக் வைத்து கதையில் இணைத்திருக்கிறார்கள். 

இப்படி படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ரோல் இருக்கிறது. ஆனால் இவர்களை வைத்து தனித்தனியாக கதை சொல்லாமல் மொத்தமாக ஒரே இடத்தில் அனைவரையும் நிற்கவைத்து குழாயடிச் சண்டைப் போல் அடுத்தடுத்து தொடர்கின்றன காட்சிகள். நாயகன் நாயகி உட்பட கிட்டதட்ட படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் டாக்ஸிக் தன்மையுடனே இருக்கின்றன. ஒரு வகையில் படம் சொல்லவருவது என்னவோ இந்த கருத்தை தான்.  உப்பு சப்பில்லாத பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கும் உறவினர்களை இப்படம் நேரடியாக சாடுகிறது என்றாலும் கதையை பார்வையாளர்களுடன் ஒன்றச் செய்ய இன்னும் அழுத்தமான உணர்வுப்பூர்வமான காட்சிகள் தேவை. படம் சொல்ல வரும் கருத்தை உணர பார்வையாளர்களுக்கு ஒரு கதை வேண்டும். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கு சண்டை என்பதைத் தவிர இந்த படத்தில் எந்த கதையும் இல்லை. 

ஒவ்வொரு முறையும் என்ன பிரச்சனை என்றே சொல்லாமல் பில்டப் கொடுக்கிறார்கள். பின் இதற்கா இவ்வளவு ஆர்பாட்டம் என்கிற அளவிற்கு தான் அந்த பிரச்சனையே இருக்கிறது. ஒட்டுமொத்த படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றால் ஒரு விஷயத்தை சொல்லலாம்.  அது படத்தில் வரும் வித விதமான மதுரை உணவுகள். வித விதமான ப்ரோட்டாக்கள் , கறி வகைகள் என காட்சிகளைப் பார்க்கையில் சின்னதாக மதுரைக்கு ஒரு ட்ரிப் போய் வரலாம் என்றுதான் தோன்றுகிறது. (ஆனால் பேரரசி மெஸ் பக்கம்  மட்டும் செல்லக்கூடாது)

நடிப்பில் விஜய் சேதுபதி சிரத்தை எடுத்துக் கொண்டாலும் படம் முழுவது உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு இணையாக நித்யா மேனன் கத்துகிறார். ஒருகட்டத்திற்கு மேல் வசனங்கள் எல்லாமே இரைச்சலாக மட்டுமே ஒலிக்கின்றன. பல காட்சிகள் வசனங்களே இல்லாமல் ஆன் ஸ்பாட்டில் வாய்க்கு வந்ததை பேசியதைப் போல் இருக்கிறது. அவ்வப்போது யோகி பாபு இடையில் வந்து காமெடி பஞ்ச் பேசுகிறார். அதில் ஒரு சிலது மட்டுமே வர்க் அவுட் ஆகின்றன. மச்சானாக வரும் சுரேஷ் கிருஷ்ணா , முடி திருத்துபராக வரும் சென்ராயன் , போலீஸாக வரும் அருள்தாஸ் என படத்தில் பல கதாபாத்திரங்களை வைத்து ஹைப் கொடுக்கிறார்கள். கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாமல் இந்த கதாபாத்திரங்களை படம் முழுவதும் வைத்து கடைசியில் ஜஸ்ட் கிட்டிங் என்கிற பாவனையில் நழுவிவிடுகிறார் இயக்குநர். சந்தோஷ் நாராயணின் பாடல்கள் கவனமீர்க்கின்றன. பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு தனித்து கவனமீர்க்கிறது. மற்றபடி சசாசரிக்கும் சுமாரான படம்தான் தலைவன் தலைவி.