கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, மாணவர்களை கடிந்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, “ இங்கு பழகுறதுதான் வாழ்கை. பழகுங்க.. தெரிஞ்சிக்கோங்கோ.. யாரு மேலயாவது கோபம் வந்தா, அத வெளிக்காட்டாதீங்க. இன்னைக்கு சண்டை போட்டவனை காலத்தில் பின்னால் சந்திக்கும் போது அவன் எனக்கு நண்பனாக மாறுகிறான். எல்லாத்துக்கும் டைம் கொடுங்க.. உடனே ரியாக்ட் பண்ணாதீங்க..
உடலால் வளர்ந்ததால் மட்டும் நாம் பெரிய ஆள் கிடையாது. உடலுக்கும் மனதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் அம்மா அப்பா உயரத்திற்கு வளர்ந்து விட்டதால் நாம் வளர்ந்து விட்டோம் என்று நினைக்கிறோம்.எல்லாவற்றிற்கும் நேரம் கொடுங்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களது நேரத்தை திருட தயாராக இருக்கிறது. அது நமது மூளையை ஆஃப் செய்கிற வேலையை செய்கிறது.
அது நம்மை வேலை செய்ய விடாமல், கூகுளில் தேட சொல்கிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை நமக்கு சுதந்திரம் கொடுப்பது போல நடிக்கிறது. அதை நம்பாதீங்க.. நீங்கள் அங்கு இருந்தால்தான் அங்கு மார்க்கெட் இருக்கும். அப்போதுதான் பொருட்களை விற்க முடியும். அதற்கு முன்னால் அதை உங்களை பயன்படுத்த வைக்க வேண்டும் அல்லவா?
உங்களை என்னவெல்லாம் சாப்பிட வைக்கலாம். எதை சாப்பிட வைத்தால் நீங்கள் நோயாளியாக மாறுவீங்க. நோயாளியா மாறுனா என்ன மருந்து சாப்பிட வைக்கலாம். நோயாளியா உங்களை எப்படி வாடிக்கையாளராக வைக்கலாம் என்பதே அதன் நோக்கம். நம்மளை மயக்கிருவாங்க.. தயவு செய்து எந்த விஷயத்தையும் ஆணிவேரை பாருங்க.
திருக்குறளில் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்ற குறள்தான் எனக்கு மிகவும் பிடித்த குறள். காரணம் அதில் திருவள்ளுவர் என்ன மதம், எந்த கடவுள் வேண்டுமென்றாலும் பின்பற்றாலும், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எதுவென்றாலும் அதை நிதானமாக கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தலை’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும் போது, மாணவர்கள் அஜித்தை சொல்கிறார் என்று நினைத்து கரகோஷம் எழுப்பினர். உடனே பேச்சை நிறுத்திய அவர் “ தேவையில்லாமல் கத்தாதீங்க.. என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கீறீர்கள் என்று கடிந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு பருவகாற்று படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய்சேதுபதி பீட்சா, சூதுகவ்வும், சேதுபதி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தொடர்ந்து பேட்ட,மாஸ்டர் விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்த அவர் இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.