தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அத்துடன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். உலக புகழ்பெற்ற  ‘மாஸ்டர் செஃப் ‘ என்ற சமையல்  நிகழ்ச்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பு தற்போது தயாராகி வருகிறது. தமிழில் உருவாகும் ‘ மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும் தெலுங்கில் உருவாகும் பதிப்பை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளனர். ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்றதுமே இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு  எகிறியுள்ளது. அவ்வபோது வெளியாகும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்களும்  இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.இறுதியாக வெளியான விஜய் சேதுபதி மற்றும் தமன்னா இருவரும் இணைந்து நடித்த நிகழ்ச்சியின் புரமோ இணையத்தை கலக்கி வருகிறது , அதில் தமன்னா “ ஆர் யு ஓகே பேபி” என கேட்க , விஜய் சேதுபதி “ கொஞ்சம் டென்ஷனா இருக்கு பேபி “ என பதிலளிக்கிறார். 




இந்நிலையில் மாஸ்டர் செஃப்பின் கிரியேட்டிவ் இயக்குநர் சஞ்சீவ் குமார்  இ-டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். சஞ்சீவ் குமார் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் பல முக்கிய நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். ஆனாலும் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சி தனக்கு சவாலானதாக  இருந்ததாக கூறுகிறார். மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்து விஜய் சேதுபதியை அனுகியதாகவும்,   கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னதாகவே இந்த நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி பச்சைக்கொடி காட்டியதாகவும்,  இதில் பணியாற்ற  சேதுபதி ஆர்வமாக இருந்ததாகவும்  தெரிவிக்கிறார் சஞ்சீவ். மேலும் ஊரடங்கு தளர்த்தியவுடன் முதல் வேலையாக படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்த  இயக்குநர் , “ விஜய் சேதுபதி மிகப்பெரிய உணவு பிரியர், அவர் அடிக்கடி சமையல் செய்யாவிட்டாலும் , சில நுணுக்கங்களை அறிந்தவர். எங்களுக்கே சில சமயங்களில் உணவின் சுவையில் சில பரிந்துரைகளை வழங்குவார், நான் அவரின் மிகப்பெரிய ரசிகர் , அவருடன் பணியாற்றுவது எனக்கு பிடித்திருக்கிறது “ என தெரிவித்தார்.




விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்தோடு தொகுத்து வழங்குகிறாராம். மேலும் நடுவர்களிடம்  சரியான கேள்விகளை மிகுந்த சுவாரஸ்யத்துடன் கேட்பதாகவும் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சஞ்சீவ் குமார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட்  7 ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களில்  ஒளிப்பரப்பாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.