நடிகர்கள் என்றால் இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற வரையறைக்குள் சிக்காமல் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி.
நடிப்பு, உழைப்பு என்ற இரண்டே மந்திரத்தை மட்டுமே நம்பும் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடிக்கும் அளவிற்கு தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதி 'ஃபர்சி' வெப் சீரிஸ் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். ஃபேமிலி மேன் தொடரின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாகித் கபூர் நடிப்பில் பிப்ரவரி 10ம் தேதி, அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகயுள்ளது 'ஃபர்சி' இணையத்தொடர். இந்த தொடரில் நடிகர் ஷாகித் கபூர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் வாலிபனாகவும், விஜய் சேதுபதி பட்டையை கிளப்பும் மிரட்டலான காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
நான் பான் இந்திய ஸ்டார் இல்லை :
'ஃபர்சி' படக்குழுவினர் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதியை "பான் இந்திய கலைஞர்" என அழைத்தபோது அதற்கு உடனே பதிலளித்த விஜய் சேதுபதி "இல்லை... நான் பான் இந்திய ஸ்டார் எல்லாம் இல்லை. நான் ஒரு நடிகன் அவ்வளவு தான். பான் இந்திய நடிகர் என கூறப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தத்தை கொடுக்கும் அந்த பட்டத்தை விட நடிகர் என அழைப்பதே சிறந்ததாக இருக்கும். பான் இந்திய நடிகர் என்பதை விட நடிகராக இருப்பது நல்லது. நடிருக்கு முன்னால் எந்த ஒரு அடையாளமும் அவசியமில்லை" என்றார். மேலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் எந்த மொழியிலும் நடிக்க தயார் என்றுள்ளார் விஜய் சேதுபதி.
ராஷி கண்ணா கொடுத்த விளக்கம் :
அதே போல நடிகை ராஷி கண்ணா பான் இந்திய ஸ்டார் என்ற நிலைப்பாடு குறித்து பேசுகையில் "எனக்கும் இந்த இந்தி நடிகர், தமிழ் நடிகர், பான் இந்திய ஸ்டார் என பாகுபாடு பார்ப்பதில் உடன்பாடு இல்லை. எந்த நடிகரும் அப்படி அழைக்க சொல்லி கேட்பதில்லை. நாங்கள் அனைவருமே நடிகர்கள் தான் அப்படி இருக்கும் போது ஏன் இந்த பிரிவினை" என்றார்.
விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணாவின் இந்த அழுத்தமான பளிச் பதிலும் பான் இந்திய நடிகர்கள் குறித்த அவர்களின் கருத்துக்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்ச்சைகள் கிடைக்குமா என வலைவீசி தேடும் பாலிவுட் பத்திரிகையாளர்களுக்கு தகுந்த ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்கள் என மக்கள் பாராட்டி வருகிறார்கள்.