தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக மாறிவிட்டார் விஜய் சேதுபதி. கதைக்களமும் தனக்கான கதாபாத்திரமும் சரியாக இருந்தால் மட்டும் போதும் , அது எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் பச்சை கொடி அசைத்து விடுகிறாராம் விஜய் சேதுபதி. தற்போது உலக புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக அசத்தி வருகிறார். ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.அதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய நான்கு படங்களும் இந்த மாதம் வெளியாக உள்ளன. துக்ளக் தர்பார் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளர். இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படம் வருகிற  செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும் , செப்டம்பர் 11-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.




இயற்கை , புறம்போக்கு என்னும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கிய , ஜனநாதன் இயக்கத்தில்  இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. கம்யூனிச சிந்தனையாளர் என அறியப்படும் ஜனநாதன் லாபம் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணியின் போது உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. காமெடி ஹாரர் பிரிவின் கீழ் உருவாகியுள்ள இந்த படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ‘அனபெல் சேதுபதி ’திரைப்படம் வெளியாக உள்ளது.




எம்.மணிகண்டன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைசி விவசாயி. கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 




இந்த படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஒடிடி-யில் வெளியிடுவதா என்ற இழுபறி நீடித்து வருகிறது. இருந்தாலும் இந்த மாதமே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.