கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித்-விஜய் ஆகிய இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் இதுவரை பலமுறை வெளியாகியுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் விஜய்யின் படங்கள் இப்போதுதான் துணிவு மற்றும் வாரிசு படம் மூலம் ஒன்றாக மோதின. இந்நிலையில், இவர்களின் அடுத்த படமும் தீபாவளி சமயத்தில் ஒன்றாக ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




வாரிசு Vs. துணிவு


தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபைலி இயக்கி, விஜய் நடிப்பில் உருவான படம் வாரிசி. இப்படத்தில், தமிழின் உச்ச நட்சத்திரங்களான சரத்குமார், குஷ்பு, ஷாம், நேஷனல் க்ரஷ் எனக்கூறப்படும் ராஷ்மிகா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதே போல ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம், துணிவு. வாரிசு படத்தில் மக்களுக்கு தெரிந்த முககங்கள் நிறைய இருக்க, துணிவு படத்திலோ, பட்டிமன்ற பேச்சாளர், பல படங்களில் துணை நடிகர்களாக நடித்தவர்கள் என ஆடியன்ஸால் பெரிதும் அறியப்படாத பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்திருந்தனர். வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. வாரிசு படம், ஃபேமிலி ஆடியன்ஸிற்கு பிடித்துப்போக, துணிவு திரைப்படம், சினிமா பிரியர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இன்ப விருந்தாக அமைந்தது. இதனால், இந்த இரண்டு படங்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததள்ள என்ற பெயருடன் திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது. 




விஜய், அஜித்தின் அடுத்த படங்கள்..


நடிகர் விஜய் வாரிசு படத்தையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடத்துவருகிறார். இது, விஜய்யின் 67ஆவது படமாகும். நடிகர் அஜித்தும், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், அஜித்தின் 62ஆவது படமாகும். இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால், கண்டிப்பாக அஜித்திற்காக ஒரு நல்ல கதையை வைத்திருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 


லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து ஏற்கனேவே மாஸ்டர் படத்தை எடுத்து வெற்றிக் கனியை ரசிகர்களிடம் கொடுத்து விட்டதால் இவர் மீதும் ரசிகர்களுக்கு எக்கச்சக்க நம்பிக்கை இருக்கிறது, போதாக்குறைக்கு தளபதி 67 படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் ஒரு படமாக இருப்பதாக முன்னதாகவே தகவல் வெளியாகிவிட்டது. 


தளபதி 67 Vs. ஏகே-62?


விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் இயக்குனரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. ஏகே-62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களும் தீபாவளியையொட்டி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 




ஒரே நேரத்தில் ரிலீஸா?


வாரிசு படம் குறித்த அப்டேட்டுகளும் துணிவு படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியான நிலையில், இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸாகும் என ரசிகர்களால் யூகிக்கப்பட்டது. அதே போலவே பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த இரண்டு படங்களும் வெளியாகின. இந்நிலையில், ஏகே-62 குறித்த அப்டேட்டும் தளபதி 67 குறித்த அப்டேட்டும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனக் கூறப்படுவதால், “இதுவும் ஒரு வேளை ஒரே நேரத்தில் வெளியாகுமோ..” என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், இது குறித்து லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேள்வியெழுப்பியபோது, “அப்படியெதுவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை” என்று கூறினார். விக்னேஷ் சிவனும் ஏகே 62 ரிலீஸ் குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை. இரண்டு படங்களின் படப்பிடிப்பு வேளைகள் முடிந்த பிறகுதான் எதுவுமே உறுதியாக தெரியும்.