வசூல் மன்னன் விஜய்

 

தமிழ்நாட்டில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார். விஜய் நடிக்கும் படங்கள் அதிகளவு வசூல்களை குவிக்கும் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர்களும் பெரும் பொருட்செலவில் விஜய் படங்களை தயாரிக்க முன்வருகின்றனர் . விஜய் படங்களும் அதிக வரவேற்புகளை பெற்று வருகிறது.



 

விஜய் மக்கள் இயக்கம்

 

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், நற்பணி மன்றத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் பல கிளை அமைப்புகளையும் உருவாக்கி உள்ளார். மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி என ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து அமைப்பு ரீதியாக தனது இயக்கத்தை வளர்த்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். அவ்வப்போது விஜய் ரசிகர்களை சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக முக்கிய நிர்வாகிகளை கூட விஜய் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். விஜய் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் விஜய் , நிர்வாகிகளை சந்திக்க துவங்கியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 



 

"கூலாக " காணப்பட்ட விஜய்

 

இந்நிலையில் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் , விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நான்கு மாவட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமானது நடைபெற்றது. இதில் கடலூர், செங்கல்பட்டு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனுமதி பெறப்பட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே விஜய் உடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். 

 



 

"ஜாலியாக " பேசிய விஜய்

 

கடந்த முறை நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தை காட்டிலும், இம்முறை விஜய் ரசிகர்களை சந்திக்க வந்த பொழுது மிகுந்த உற்சாகத்துடனே காணப்பட்டார். கருப்பு நிற உடை அணிந்து வந்த விஜய் பார்ப்பதற்கே, மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளரங்கு கூட்டத்தில் பேசத் துவங்கிய விஜய், ரசிகர்கள் அனைவரும் உணவு அருந்தி விட்டீர்களா என கேட்டுள்ளார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்தும் நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து பேசிய விஜய், 'தங்கள் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டுமே செலவு செய்யுங்கள் அதிகளவு பணத்தை நற்பணிப்புக்காக செலவு செய்ய வேண்டாம. உங்கள் குடும்பம் மட்டுமே முக்கியம். குடும்பத்திற்கு பிறகு தான் மக்கள் பணி. பணம் செலவழிக்க முடியவில்லை என்றால் , பரவாயில்லை மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை வேறு ஏதாவது வகையில் செய்யலாம்” என அறிவுரை வழங்கி உள்ளார். தொடர்ந்து விஜய் பேச முற்பட்ட பொழுது, அவருடைய மைக்கில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

 



 

சரி செய்து மீண்டும் விஜய்யிடம் மைக் கொடுத்த பிறகும் அதே நிலை தொடர்ந்தால் பதற்றம் ஏற்பட்டு, கூட்ட அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் இதனால் பதற்றம் அடைந்துள்ளார். மைக் முறையாக வேலை செய்யாததால் , ஆனந்த் கடைசி வரை கோபத்துடன் இருந்ததாக நிர்வாகிகள் சில தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய விஜய், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அடிக்கும், பொழுது வார்த்தைகளில் சற்று கவனம் தேவை என கூறியுள்ளார். தொடர்ந்து ரசிகர்களிடம், ஜாலியாக பேசிவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.

 

 ரசிகரை தூக்கிய விஜய்

 

ரசிகர்கள் மத்தியில் பேசி முடித்த பிறகு நடிகர் விஜய் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க வந்தபோது அவரை தனது கையில் தூக்கி வைத்து போஸ் கொடுத்து இருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் சமூகத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.