ஃபிபா உலகக் கோப்பை 2022 இறுதிப்போட்டிக்கு பிறகு டிசம்பர் 18-ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அர்ஜெண்டினா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேசிய மெஸ்ஸி, ”இறுதிப்போட்டிக்கு அர்ஜெண்டினா அணி மீண்டும் ஒருமுறை சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு பிறகு, என்னுடைய உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலகக் கோப்பை வருவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதுவரை என்னால் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. தொடர்ந்து, அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடினாலும் தற்போது மாதிரி சிறப்பாக செயல்பட்டு, அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்வோனா என்று தெரியாது. வரும் 18ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில், உலகக் கோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய மெஸ்ஸி, ஃபிபா உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகள் படைத்தது மகிழ்ச்சிதான். ஆனால், உலகக் கோப்பையை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். அதை வென்று ஒன்னும் அழகாக மாற்றுவோம். உலகக் கோப்பையை வெல்ல இன்னும் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். அதற்காக கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இந்தமுறை நீண்டநாள் கனவை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார். 


 






உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி உள்ளார். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தில் அர்ஜெண்டினா அணிக்காக 11 கோல்கள் அடித்து அதிக கோல்களை அடித்த பெருமை மெஸ்ஸி படைத்துள்ளார். 


குரோஷியா அணிக்கு எதிரான ஃபிபா உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 


22வது கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கி, லீக் போட்டிகள், நாக் - அவுட் சுற்று, கால் இறுதி சுற்றுகளைக் கடந்து போட்டித் தொடரானது அரை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணியும், முதலாவது உலகக்கோப்பையை வெல்ல பெரும் கனவு கண்ட குரோஷிய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 


போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா அணியானது ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குரோஷிய அணி தாங்கள் கோல் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடியதைவிட, அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடிய நிமிடங்களே அதிகம். 


மெஸ்ஸி


போட்டியின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி - ஷாட்டை அணியின் கேப்டனும் உலகத்தரமான கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக கோல் அடித்து அணியையை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல முயற்சித்தார் என்பதை விட, உலகக்கோப்பைக்கு அருகில் கொண்டு சென்றார் என்றே கூறவேண்டும். 


அதன் பின்னர், அர்ஜெண்டினாவின் ஜுவாலியன் ஆல்வரிஸ் போட்டியின் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியில், 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதிக்கு பின்னர், இரு அணிகளுமே போட்டியினை விறுவிறுப்பாக்கினர். ஆனால் அதற்கு மீண்டும் பலன் கிடைத்ததெல்லாம், அர்ஜெண்டினாவுக்குத்தான். போட்டியின் 69வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக பந்தை பாஸ் செய்ய ஜுவாலியன் ஆல்வரிஸ் நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார். இதனால், 3 - 0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்து, உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.