விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இரண்டாவது முறையாக விஜய் இன்று பனையூரில் சந்திக்க இருந்த நிலையில், தற்போது விஜய் அங்கு வருகை தந்துள்ளார். இன்று பனையூரில் நடைபெறும் கூட்டத்தில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளார். கருப்பு சட்டையில் கருப்பு நிற காரில் விஜய் வந்து இறங்கும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்கூட்டியே ஐந்து மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுடைய ஆதார் உள்ளிட்டவை பெறப்பட்டு, ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை வைத்திருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதஅவர்கள் அனைவருக்கும் பனையூர் இல்லத்தில் சுடச்சுட பிரியாணி தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள விஜய்யின் மற்றொரு இல்லத்திற்கு பிரியாணி பார்சல் கொடுக்கப்பட்டது. இந்த பிரியாணியை விஜய்யும் சாப்பிட இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜய் படங்களும் அதிக வரவேற்புகளை பெற்று வரும் நிலையில், அதிகளவு வசூல்களை குவிக்கும் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர்களும் பெரும் பொருட்செல்லில் விஜய் படங்களை தயாரிக்க முன்வருகின்றனர்.
அரசியலும் ரசிகர் மன்றமும் :
தமிழ்நாட்டில் கதாநாயகராக நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் தனி ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர் மன்றம் மூலம் நடிகர்கள் தங்கள் படங்களை பிரபலப்படுத்துவது மட்டுமில்லாமல், நற்பணிகளும் செய்து வருகின்றனர். சில சமயங்களில் பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினால், இந்த ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் , ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார் . விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். ஒருங்கிணைப்பு கூட்டங்கள் உள்ளிட்டவற்றை, அவர் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நேரடியாக அழைத்து, பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், நடிகர் விஜய்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமூக வலைதள பக்கங்கள் துவங்கப்பட்டது. வாரம் தோறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு ஏதாவது, ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அதை ஏற்பாடு செய்யும் வகையில் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டது. பனையூரில் உள்ள அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, பெரிய அளவில் கூட்டங்களை அலுவலகத்திலேயே நடத்த ஏதுவாக தயார் செய்யப்பட்டு இருந்தது.இதனை தொடர்ந்து, அன்றைய தினம் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், திரைப்படம் ஷூட்டிங் இருந்தால் அது கேன்சல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. 3 மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விஜய் மக்கள் இயக்கத்தினரை விஜய் சந்தித்த பொழுது பல சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, விஜய் கருப்பு நிற திரை அமைக்கப்பட்ட காரில் வந்ததற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதுபோக விஜய் மக்கள் இயக்க நிர்வாகியான புஸ்சி ஆனந்த், கால்களில் ரசிகர்கள் விழுந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.