நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கப்போகிறார் என்ற தகவல்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியானாலும், விஜய் மற்றும் அவரது மக்கள் இயக்க நடவடிக்கை தகவல்களை உறுதி செய்யும் வகையில் உள்ளது. குறிப்பாக அவருடன் இருக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செலாளரும் முன்னாள் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கி வருவதாக கூறப்படுவதற்கு ஏற்பவும் மக்கள் இயக்க நடவடிக்கைகள் இருக்கின்றது. 


இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பனையூரில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த் பேசுகையில்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இயக்கத்தின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட்டு ட்ரெண்ட் செய்ய  வேண்டும்.


மக்கள் இயக்கத்தின்  தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள மக்கள் இயக்க வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிர வேண்டும்.  பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் மக்கள் இயக்கத் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே சமூக வலைதளங்களில் பகிர வேண்டும்.  விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் மற்றவர்கள் அனைவரும் அந்த பதிவிற்கு லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் மற்றும் ஷேரிங் எண்ணிக்கை என்பது மில்லியன்களைக் கடக்க வேண்டும். இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களும் அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மறுக்கட்டமைப்பு மூலம் சீரமைத்து விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.


இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, மாணவர் அணி,  விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை மிகச் சரியாக நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூர், ஊராட்சி கிளை ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30 ஆயிரம் நபர்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள  234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க  மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


இயக்கம் செய்து வரும் மற்றும் செய்யப்போகும் சேவைகளை தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவை பதிவிடும்போது எப்போது எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும். இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியிட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின்  சமூகவலைதளப் பதிவுகளை லைக் செய்யவும் ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் சமூகவலைதளத்தில் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஆபாசமான பதிவுகளை பதிவிடக்கூடாது” என குறிப்பிட்டு பேசியிருந்தார். 


மேலும் விரைவில் நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரையும் லியோ இசை வெளியீட்டு விழாவில் சந்திப்பார் எனவும் கூறினார்.