இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய "பீஸ்ட்" திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடாத இந்த படத்திற்கு ' தளபதி 66' என்ற தலைப்புடன் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க, கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கில் குட்டியாக ஒரு பாடல் மட்டும் சென்னையில் எடுத்து விட்டு தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் கடந்த ஒரு மாத காலமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். ஏற்கனவே, இவர்கள் இருவரும் இணைய இருப்பதாக பல்வேறு செய்திகள் பரவியது.
அதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் வாய் மொழியாக தெரிவித்துள்ளார். அதில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வெளியான இரண்டு வாரத்திற்கு பிறகு 'தளபதி 67' குறித்த அப்டேட் வெளியாகும். இந்த படம் மாஸ் அண்ட் கிளாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா உள்பட பலர் நடித்த 'விக்ரம்', ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது மற்றும் பாக்ஸ் ஆபிஸை உலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்