கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது இந்திய சினிமாவிலும் அதிக கவனம் பெற தொடங்கியிருக்கிறார்.இது ஒரு புறம் இருக்க தனுஷை  தங்கள் மகன் எனக் கூறி மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த,  கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் பல வருடங்களாக நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். தனுஷ் தங்களின் மூன்றாவது மகன் என்றும் , சிறு வயதில் சினிமா மீது இருந்த ஆசை காரணமாக வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், அத்துடன், தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி  உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.







இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கதிரேசன் தம்பதிகள், தனுஷ் மற்றும் அவரது தந்தை பண பலத்தால் வென்றதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். தற்போது  கஸ்தூரி ராஜா தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாவிற்கு அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாவின் வழக்கறிஞர்  காஜாமொய்தீன் கிஸ்தி பதில் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் “எனது கிளைண்ட்ஸ் மீது  தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்குமாறு உங்கள் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இணங்கத் தவறினால், எனது கிளைண்ட்ஸ்  உரிமைகளைப் பாதுகாக்க தகுதிவாய்ந்த நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படும். தவறினால்  10 கோடி ரூபாய் வரையில் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.