லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக சாதனைப் படைத்துள்ளது.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்   நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகியது. விஜய் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன்,  மிஸ்கின் உள்ளிட்டவர்கள் இந்த ட்ரெய்லரில் காணப்பட்டார்கள். மேலும் படத்தில் அனுராக் கஷ்யப், பிரியா ஆனந்த், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


யூடியூப் சாதனை


பொதுவாகவே  நடிகர் விஜய் நடித்தப் படங்கள் குறித்தான் அப்டேட்கள் இணையதளத்தில் பல்வேறு ரெக்கார்ட்களை உருவாக்கும். லியோ படத்தைப் பொறுத்தவரை சில தகவல்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்று தோன்றும் அளவிற்கு  நம்பமுடியாதவை. உதாரணத்திற்கும் ட்விட்டரில் லியோ என்கிற வார்த்தை மட்டுமே  2 கோடிகளுக்கும் அதிக முறை குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. முன்னதாக லியோ படத்தின் நான் ரெடிதான் பாடல் வெளியாகி இணையதளத்தை அசரடித்தது. தற்போது லியோ படத்தின் ட்ரெய்லர் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.


ஒரே  நாளில் அதிக பார்வையாளர்கள்


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி லியோ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 31 மில்லியன் அதாவது 3 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் தென் இந்தியாவில் ஒரே நாளில் அதிகம் பார்வையாளர்களைப் பெற்ற சாதனையை படைத்துள்ளது லியோ. மேலும் 24 மணி நேரத்திற்குள்ளாக அதிக லைக்குகள் பெற்ற (2.64 மில்லியன்) வீடியோவாகவும் சாதனைப் படைத்துள்ளது.


சர்ச்சைகள்


ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்று வரும் லியோ திரைப்படம் மறுபக்கம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முதலில் நா ரெடிதான் பாடல் வெளியாகி அதில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சி சமூக ஆர்வலர்களின் விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது நடிகர் விஜயின் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. லியோ திரைப்படம் திரையரங்குகளின் வெளியாகும்போது இந்த காட்சிகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தளபதி 68


லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். பூர்ணிமா செளதரி, பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து  வருகிறது. தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. லியோ திரைப்படத்தின் ரிலீசுக்குப் பின் இந்தப் படம் குறித்தான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.