சமீபகாலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாகி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்கள். ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜ், தேவா உள்ளிட்ட பலரும் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மக்கள் மத்தியிலும் இந்த லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


 



அந்த வகையில் சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லைவ் கான்சர்ட் ஒன்று கடந்த மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற போது அதில் ஏற்பட்ட குளறுபடியால் பெரும் சர்ச்சையில் சிக்கி இணையத்தில் ஒரு பேசுபொருளாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


பன்முகம் கொண்டவர் :


தமிழ் சினிமாவில் ஒரு இசைமைப்பளராக அறிமுகமாகி பல துள்ளலான பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்போது பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட செலிபிரிட்டியாக திகழ்ந்து வருகிறார். 


பிரபலமான இசையமைப்பாளர் : 


டிஷ்யூம் திரைப்படம் தான் விஜய் ஆண்டனி முதலில் இசையமைத்த படம் என்றாலும் முதலில் வெளியானது 'சுக்ரன்' திரைப்படம் தான். அப்படத்தில் இடம்பெற்ற "சப்போஸ் உன்னை காதலிச்சு..." என்ற பாடல் இன்று வரை எவர்கிரீன் பாடலாக இருந்து வருகிறது. முதல் படத்திலேயே கவனம் பெற்ற விஜய் ஆண்டனி திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது சின்னத்திரை சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். டைலாமோ, நாக்கு முக்க உள்ளிட்ட துள்ளலான பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். 


 



வித்தியாசமான நடிகர் :


2012ம் ஆண்டு வெளியான "நான்" திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிப்பு திறமையை நிரூபிக்க துவங்கியவர் பின்னர் சலீம், சைத்தான், யமன், காளி, அண்ணாதுரை, பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அக்டோபர் 6ம் தேதி அவர் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமான 'ரத்தம்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி  இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். 


 



எங்கு ? எப்போது ? 


அந்த வகையில் கோவையில் டிசம்பர் 2ம் தேதியும், பெங்களூருவில் டிசம்பர் 16ம் தேதியும், சென்னையில் நியூ இயர் கொண்டாட்டமாக டிசம்பர் 31ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடம் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/vijayantonybcc என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தனது எக்ஸ் தளம் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.


நல்ல மனமாற்றம் :


கடந்த மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டதால் மிகவும் உடைந்து போனவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு இந்த இசை நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு நல்ல மனமாற்றத்தை தரும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.