லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவாகி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்கிற ஒரு சிறிய பட்ஜட் படத்தில் தொடங்கிய இவரது பயணம் இன்று பான் இந்தியத் திரைப்படமான லியோ வரை வந்து நிற்கிறது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என தமிழ் சினிமாவில் முதல் முறையாக தனக்கென ஒரு தனி ஜானரை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் இயக்கியிருக்கும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில். அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் அவரது முகம் மட்டுமே நிறைந்திருக்கிறது.
லியோ
லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் இரவுப் பகலாக நேர்காணல்களை கொடுத்து வருகிறார். இந்த நேர்காணல்களில் பெரும்பாலும் லியோ படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் லோக்கி அவ்வப்போது தன்னைப் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லியோ படம் அறிவிக்கப் பட்டபோது இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப் பட்டது. இப்படி படத்தின் ரிலீஸை முன்னதாகவே அறிவித்து அந்த அழுத்தத்தில் வேலை செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக பேசியிருந்தார். இனிமேல் இந்த மாதிரியான நிர்பந்தங்களுக்கு கீழ் தான் வேலை செய்யப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடைசியாக 8 மணி நேரம் தூங்கியது எப்போது
ஒரு படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை வரிசையில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை எப்படி செலவிடுகிறார் என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. சமீபத்தில் அவரிடம் கடைசியாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக எப்போது தூங்கினார் என்கிற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பதில் என்னத் தெரியுமா. லியோ படத்தின் சென்சார் நிறைவடைந்த பின்னரே தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு 8 மணி நேரம் தூங்கியதாக அவர் தெரிவித்தார்.
தலைவர் 171
அடுத்ததாக தான் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தை பொறுமையாக தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு இயக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்து பலவிதமான சர்ப்ரைஸ் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தான் ஐமேக்ஸ் கேமராவில் இயக்க இருப்பதாகவும் மலையாள திரைக்கதை எழுத்தாளர்களுடன் பணியாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லியோ முன்பதிவு
விஜய், த்ரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி வெளியாகிறது. லியோ படத்திற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளில் லியோ படம் டிக்கெட் விற்பனைகளில் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.