திரையரங்கங்களுக்கு வசூல் கொடுக்கும் ரீரிலீஸ்


சமீப காலங்களில் பல்வேறு படங்கள் ரீரிலீஸ் செய்யப் பட்டு வருகின்றன. ரஜினிகாந்த் நடித்த பாபா, முத்து, தனுஷ் நடித்த 3 மயக்கம் என்ன, சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஆகியப் படங்கள் திரையரங்கங்களில் மறு வெளியீடு செய்யப் பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும் திரையரங்கத்திற்கு லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கின்றன. திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆவது குறித்தும் அவற்றின் மூலம் திரையரங்கத்திற்கு எந்த அளவு லாபம் கிடைக்கின்றன குறித்தும் சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் பேசியுள்ளார்.


ஹவுஸ் ஃபுல்


”முன்பெல்லாம்  நடிகர்களின் பிறந்தநாளையொட்டி அவர்களின் படங்களை ரீரிலீஸ் செய்வோம். அதை தவிர்த்து பெரிய படங்கள்  ஏதும் இல்லாத சமயத்தில் பழைய படங்களை ரீரிலீஸ் செய்வோம். இந்த மாதிரியான சமயங்களில் சில படங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெறுகின்றன. சில திரைப்படங்கள் அவை வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெறாமல் இருந்திருக்கும். ரஜினி நடித்த பாபா, செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகியப் படங்கள் வெளியானபோது பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்தப் படங்கள் இப்போது ஓடிடி தளங்களில் இருக்கின்றன. ஆனாலும் ரசிகர்கள் இந்தப் படங்களை திரையரங்கத்தில் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.  தனுஷ்  நடித்த 3 திரைப்படம் வெளியானபோது எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


ரீரிலீஸாகும் கில்லி


லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து எந்த படமும் சரியாக ஓடவில்லை, மேலும் டிசம்பர் மாதம் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியாக இருந்து தள்ளிப் போனது. இந்த காலத்தில் தனுஷ் நடித்த 3 மற்றும் மயக்கம் என்ன ஆகிய இரு படங்களும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடிகர் விஜய்  நடித்த கில்லி படத்தை ரீரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


இந்தப் படங்களுக்கு குறைவான விலையே நிர்ணியிக்கப் படுகின்றன. இதில் வரும் லாபம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 59- 50 அல்லது 60- 40 என பங்கிடப் படும் . குறைவான கட்டணம் என்பதால் இந்தப் படங்களில் இருந்து வரும் லாபமும் குறைவாகதான் இருக்கும்” என்று அவர் கூறினார்


திருப்பூர் சுப்ரமணியம்


இதுதொடர்பாக திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது இந்த மாதிரியான படங்களுக்கு டிக்கெட் விலை குறைவாக இருப்பதே மக்கள் அதிகளவில் வருவதற்கான முக்கிய காரணம் , இந்தப் படங்களுக்கு அதிக விலை வைத்தால் கூட்டம் வராது. கூட்டம் குறைவாக இருப்பதற்கு குறைவான விலை டிக்கெட் வைத்து அதிக கூட்டம் வருவது நல்லது தான் இல்லையா.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.