தமிழ்நாட்டில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த மாதம் டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் எப்போது மழை பெய்தாலும் மக்களுக்கு சற்று கலக்கமாகவே உள்ளது. தற்போது பனிக்காலமும் தொடங்கி விட்டதால் மக்கள் சிரமப்பட்டு வருகிறனர்.
இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (25 ஆம் தேதி) முதல் டிசம்பர் 30 தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.