நடிகர் விஜய், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்ற ‘வேலாயுதம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 வருடங்கள் கடந்துள்ளன.
‘வேலாயுதம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. முன்னதாக வெளியான ‘தில்லாலங்கடி’ படம் வரை, தம்பியான ஜெயம் ரவியை வைத்தே படம் இயக்கி வந்த மோகன் ராஜா, முதன்முறையாக வேலாயுதம் படம் மூலமாக விஜயுடன் இணைந்தார். விஜய்க்கு அதற்கு முன்னதாக வெளியான ‘அழகிய தமிழ் மகன்’ ‘ சுறா’ படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஜா மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தில் கமிட் ஆனார் விஜய். 2000 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ‘ஆசாத்’ படத்தை தழுவி உருவாக்கப்பட்ட இந்தப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார்.
என்ன கதை?
உள்துறை அமைச்சரின் உதவியோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் சென்னை உட்பட தென்னிந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து அசாம்பிவித சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு, சென்னையில் ஊடுருவும். இதனிடையே இது தவிர பல விரோத செயல்களில் ஈடுபடும் அந்த அமைச்சரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் நிருபராக வரும் ஜெனிலியா அதனை கிழித்தெறிய முயல்வார்.
இதனையறிந்த அமைச்சரை சார்ந்த ரவுடிகும்பல், அவரையும் அவரின் நண்பர்களையும் கொலை செய்ய திட்டமிடும். இந்த சம்பவத்தில் தப்பி பிழைக்கும் ஜெனிலியா, அமைச்சரின் குண்டு வெடிப்பு சம்பவத்தை எச்சரிக்கை கடிதமாக எழுதி... இப்படிக்கு வேலாயுதம் என எழுதி வைத்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். இதனிடையே தங்கை கல்யாணத்திற்காக சீட்டு கம்பெனியில் போடபட்ட பணத்திற்காக சென்னை வரும் விஜய், இங்கு நடக்க இருந்த குண்டு வெடிப்புகளை அவருக்கே தெரியாமல் செயலிழக்க வைப்பார்.
ஒருக்கட்டத்தில் சீட்டு கம்பெனியும் ஏமாற்றி விட, நொந்து போய் உட்காரும் விஜயிடம் ஜெனிலியா, தன்னைத்தான் அனைவரும் வேலாயுதம் என நம்பி இருப்பதாக தெரிவிப்பார். இதனையடுத்து விஜய் எடுக்கும் விஸ்வரூபம் தான் வேலாயுதமாக உருவாகியிருந்தது.
திருப்பாச்சிக்கு பிறகு அண்ணன் தங்கை பாசத்தில் குதித்திருந்த விஜய்க்கு பொன்னான தங்கையாக நடித்திருந்தார் சரண்யா. தங்கைக்காக எதுவும் செய்யும் விஜயின், அட்ராசிட்டிகள் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவற்றை ரசிக்கும் படி திரைக்கதை அமைத்து இருந்தார் மோகன். அண்ணன் தங்கைக்கு இடையேயான எமோஷனையும் அழகாக ஹோல்ட் செய்திருந்தார் விஜய் முதல் பாதியில் சென்னைக்கு வந்த பின்னர் படத்தை மொத்தமாக தாங்கி நின்றது சந்தானத்தின் காமெடிகள்தான். கலகலப்பாய் முதல் பாதி செல்ல தலைகீழாய் இரண்டாம் பாதி. காரணம் விஜய்க்கு சூப்பர் ஹீரோ வேடம். முதல்பாதியில் பொறுப்பான அண்ணனாக ரசிக்க வைத்த விஜயை, சூப்பர் ஹீரோ வேடத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. குறிப்பாக அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆடை நமக்கு அந்நியனை ஞாபகப்படுத்தியது.
இரண்டாம் பாதியில் இடம் பெற்ற ஆக்சன் காட்சிகளில் விஜய் ரசிக்க வைத்திருந்தாலும், அதற்கான காரணங்களும், அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த திரைக்கதையும் நமக்கு படத்தின் மீதான சுவாரசியத்தை குறைத்து விட்டது. விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஜயின் ரசிகர்களுக்கு, விஜய்க்காக விஜய் ஆண்டனி பாடிய ‘சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது’ பாடல் விஜயையும், அவரது ரசிகர்களையும் அந்த நேரத்தில் ஒரு எமோஷன் சோனுக்குள் கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
அதே போல தன்னுடைய பெரும்பான்மையான படங்களில் குத்து பாட்டு ரகத்தில் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்ட்னி, இதில் ‘முளைச்சு மூணு இலை’ ‘ரத்தத்தின் ரத்தமே’ , ‘மாயம் செய்தாயோ’ என மெலடியில் கலக்கி இருந்தார். ஆக, ஆக்சன் அவதாரமாக உருவெடுத்த விஜய்க்கு காட்டு ஹிட்டாக அமைந்திருக்க வேண்டிய இந்தப்படம், இரண்டாம் பாதியின் சொதப்பலால் சுமாரான படமாக மாறிப்போனது.