நெஞ்சிலே அண்ணாவை சுமந்து, அவர் தம் வழியில் தன் பயணத்தை தொடங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கூட்டு முயற்சியே ‛காஞ்சித்தலைவன்’. அண்ணாவிற்கு தரும் அடைமொழியை படத்திற்கு பெயராக வைத்து, அதற்கு கதை, வசனம் எழுதியவர் கருணாநிதி. அத்தோடு நிற்காமல், முரசொலி மாறன் மற்றும் மேகலா பிக்சர்ஸ் காசிலிங்கத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்ததும் கருணாநிதி தான். 


எம்.ஜி.ஆர்.,-பானுமதி கூட்டணியில் இன்னும் பல திரைப்பட்டாளங்கள் பங்கு பெற்ற பெருங்காவியம், ‛காவியத்தலைவன்’. இசை கே.வி.மகாதேவன். நரசிம்ம வர்ம பல்லவனாக எம்.ஜி.ஆர்., தளபதி பரஞ்சோதியாக லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். புலிகேசியாக அசோகன்.


அரச உடையில் எம்.ஜி.ஆர்.,யை பார்த்து ஆர்ப்பரித்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த படம் வெளியான போது, கருணாநிதியும், எஸ்.எஸ்.ஆர்.,வும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர். எம்.ஜி.ஆர்., சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். அப்போதே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. 



 எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.


‛வெல்க காஞ்சி... வெல்க காஞ்சி...’ என கருணாநிதி எழுதிய பாடலுக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவிக்க, பின்னர் அது ‛வெல்க நாடு... வெல்க நாடு...’ என மாற்றப்பட்டது. ஆலங்குடி சோமுவின் வரிகளில் இப்படத்தில் பெரும்பாலான பாடல்கள் எழுதப்பட்டன. படத்தில் மொத்தம் 9 பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சோழர்களின் பெருமை பேசும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.



காஞ்சித் தலைவன், பல்லவர்கள் காலத்து கதை. நரசிம்ம வர்மனின் தங்கைக்கும், பரஞ்சோதிக்கும் காதல். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க புலிகேசியால் அனுப்பப்படும் பானுமதியும், எம்.ஆர்.,ராதாவும் செய்யும் சூழ்ச்சிகள், இலங்கை மன்னன் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்கச் செய்யும் முயற்சி, நடிக்க வந்த இடத்தில் நரசிம்ம வர்மனை காதலிக்கும் பானுமதி, பானுமதி-நரசிம்ம வர்மன் காதலை விரும்பாத பரஞ்சோதி, இத்தனை சிக்கலுக்கு பின்னால் நடக்கும் போர் என நேர்த்தியான பல்லவர் கதை இது.  பல்லவரில் தொடங்கி புலிக்கேசியை தோற்கடிப்பது வரை நகரும் திரைக்கதை. 


எம்.ஜி.ஆர்., படத்தில் பிற நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படம், காஞ்சித்தலைவன் எனலாம். அந்த அளவிற்கு சக நடிகர்களுக்கு போதிய வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார். அண்ணாவிற்கு புகழ், பல்லவர்களின் சிறப்பு என ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்து அதில் வெற்றியை பெற்றது எம்.ஜி.ஆர்-கருணாநிதி கூட்டணி. 


1963 அக்போடர் 26 ம் தேதி இதே நாளில் 59 ஆண்டுகளுக்கு முன் வெளியான இத்திரைப்படம், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ரசிகர்களால் தமிழ்நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. காலம் கடந்தும் உச்சரிக்கப்படும் ‛காஞ்சித்தலைவன்’ என்கிற பெயருக்கு, விதை போட்ட நாள் இன்று!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண