ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டி அரபு அமீரகத்தில் சனிக்கிழமை அன்று தொடங்கியது.ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் இடையிலான மோதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. இந்த போட்டியில் 147 ரன்கள் எடுத்து மொத்த விக்கட்டையும் இழந்த நிலையில் இருந்த பாகிஸ்தானை இந்தியா இறுதி ஓவர் வரை சென்று வெற்றி வாகை சூடியது. ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா விராட் கோலியின் பங்கு இந்த ஆட்டத்தில் இன்றியமையாததாக கருதப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்திற்கு சென்று இருந்தார். தொலைக்காட்சிகளின் லைவில் விஜய் தேவர கொண்டாவை அனைவரும் பார்த்திருப்போம். அப்போது அங்கு விஜய் தேவர கொண்டாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருந்தது. அவர் பேசுகையில், அவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கடும் விமர்சனத்தை தற்போது பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோர் நடிப்பில் லைகர் திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. பட வெளியீட்டிற்கு முன் படத்தின் ப்ரோமோஷன்கள் பயங்கரமாக இருந்த நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமாய் லைகர் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் திரைப்படத்தினால் வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இந்த செய்தியால் விஜய் தேவரகொண்டா தற்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா தனக்கு தல தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை என்றும், ஆனால் ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியின் பயோப்பிக்கில் நடித்து விட்டதால் தற்போது இவர் விராட் கோலியின் பயோப்பிக்கில் நடிக்க விருப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தல தோனியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் எம்.எஸ்.தோனி. இந்த திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் முன்னணி கதாபாத்திரத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சுஷாந்த் தோனியை போன்ற அவரது நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.2020 ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.