ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு ரசிகர்களிடம் முதல் நாள் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது ஆனால், படத்திற்கு கிடைத்துள்ள நெகட்டிவ் விமர்சனங்கள் வசூலை அடுத்தடுத்த நாள் வசூலை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஃபேமிலி ஸ்டார்


விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து நடித்து ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் பெட்லா இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக இவர் இயக்கி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அபிநயா, வாசுகி, ரோகினி ஹட்டங்கடி, மற்றும் ரவி பாபு இப்படத்தில் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். திவ்யான்ஷா கெளசிக் இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.


ஃபேமிலி ஸ்டார் முதல் நாள் வசூல்


ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு முதல் நாளில் ரசிகர்களிடம் சிற்ப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் இந்தியளவில் 5 .75 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்து வர இருக்கக் கூடிய இரண்டு விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


வசூலை பாதிக்குமா நெகட்டிவ் விமர்சனங்கள்






எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு மிக சுமாரான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. கீதகோவிந்தம் படம் ஏற்படுத்திய தாக்கம் இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை என்றும் படம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். அதே நேரம் தெலுங்கில் சீதாராமம் , ஹாய் நானா என அடுத்தடுத்த இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த மிருணால் தாக்கூருக்கு இப்படம் முதல் தோல்வியாக அமையலாம் என்றும் பேசப்படுகிறது. இப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் அடுத்தடுத்த நாட்களின் வசூலை பாதிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள். விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான பான் இந்திய படம் லைகர் தோல்வியை சந்தித்தது குறிபிடத் தக்கது