2002 தீபாவளி
2002ஆம் ஆண்டு தீபாவளி அன்று மொத்தம் 8 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன், விஜயகாந்த் நடித்த ‘ரமணா’, சிம்பு நடிப்பில் உருவான காதல் அழிவதில்லை, சேரன் நடித்த சொல்ல மறந்த கதை, ஆண்டிப்பட்டி அரசம்பட்டி, படைவீட்டு அம்மன், கேம். இந்த எட்டுப் படங்களில் பகவதி மற்றும் வில்லன் ஆகிய இரு படங்களுக்கு வழக்கம்போல் போட்டி நிலவியது. ஆனால் நடந்தது வேறு!
வில்லன்
2002ஆம் ஆண்டு கே. எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லன். அஜித் குமார், மீனா, கிரண், ரமேஷ் கண்ணா, விஜயன், உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். அஜித் குமார் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வில்லன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கதை
ஷிவா (அஜித் குமார்) , தங்கம் (மீனா) மணி ( ரமேஷ் கண்ணா) ஆகிய மூவரும் ஒரு குழுவாக பெரிய பெரிய திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். வெளி உலகத்திற்கு வேறு வேறு தொழில்கள் செய்யும் இவர்கள் இந்தத் திருட்டை செய்வதற்கான எந்தக் காரணங்களும் தெரிவதில்லை. வெளி உலகத்திற்கு பஸ் கண்டக்டராக இருக்கும் ஷிவாவின் மேல் காதலில் விழுகிறார் லாவண்யா. இப்படியான நிலையில் ஷிவா செய்யும் திருட்டுக்களை கண்டுபிடிக்கும் லாவண்யா உண்மையை தெரிந்துகொள்கிறார்.
விஷ்ணு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதால் அவனை ஒரு ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்வதால் ஷிவா மற்றும் அவனது இரட்டை சகோதரனான விஷ்ணு ஆகிய இருவரும் தங்களது வீட்டை வீட்டு ஓடி வருகிறார்கள். தன்னுடை சகோதரனைப் போல் உடல்ரீதியிலான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிபபதற்காக இந்தத் திருட்டுக்களை செய்கிறார் ஷிவா. இதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதே படத்தின் மீதிக் கதை.
பகவதி
விஜய் , ரீமா சென், வடிவேலு , ஜெய், மோனிகா உள்ளவர் பகவதி படத்தின் நடித்திருந்தனர். ஏ.வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கி தேவா இந்தப் படத்திற்கு இசைமைத்தார். டீக்கடை வைத்திருக்கும் விஜய் தன்னுடைய தம்பியின் குழந்தையைக் காபாற்ற எப்படி மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே பகவதி படத்தின் கதை.
குஷி, பத்ரி, ஃப்ரண்ட்ஸ், ப்ரியமானவளே, ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த விஜய், பகவதி படத்தில் முழுவதும் மாஸான ஒரு நடிகராக நடித்தார். அதே நேரத்தில் வில்லன் படத்தில் இரட்டை கதாப்பாத்திரங்களில் அஜித் நடித்தார். முழு படத்திலும் ஹீரோவாக இல்லாமல் முதல் பாதி முழுவதும் நெகட்டிவ் கதாபாத்திரமாகவே இந்தப் படத்தில் அஜித் நடித்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது.
மாஸ் காண்பித்த விஜயகாந்த்!
அதே நேரத்தில் விஜய்யை ரொமான்டிக் நடிகராக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு திடீரென்று அவரை மாஸான ஹீரோவாக ஏற்றுக்கொள்வதில் ஒரு சிறிய தயக்கம் இருக்கவே செய்தது. அவரது முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் போதுமான வெற்றியைத் தரவில்லை என்பதே நிஜம்.
இரண்டு படங்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது என்றாலும் 2002 தீபாவளியில் வெற்றி பெற்றது என்னவோ ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படம் தான். சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்போது வளர்ந்து வரும் நடிகர்களாக விளங்கிய விஜய் - அஜித் படங்களை புரட்சிக் கலைஞர், கேப்டன் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் ரமணா படம் பின்னுக்குத் தள்ளி தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றது.