டெவில்


மாருதி ஃபிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.


விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன், தேவிபாரதி, இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலா, கதிர், மிஷ்கினுக்கு குருவாக இருந்து இசை கற்றுத் தரும்  இசை மேதை பீம்சென் ஜோஷி சிஷ்யரான 90 வயது  நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி ,இயக்குநர் வின்சென்ட் செல்வா , அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர் தானு . இயக்குநர் கருணாகரன்,  இயக்குநர் சசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.


ஏன் இசையமைக்கிறேன்


இந்த நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் தான் படத்திற்காக இசையமைத்த பாடல்களை மேடையில் இசைக்கலைஞர்களுடன் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவை தன்னுடைய இரண்டாவது குரு எனக் கூறிய மிஷ்கின் இளையராஜாவை நினைத்து மேடையில் மண்டியிட்டார்.


“என்னுடைய சிறு வயதில் என்னுடைய தந்தை என்னை ஒரு பொருள்காட்சிக்கு கூட்டிப் போனார். என்னுடைய தந்தையின் தலையில் அமர்ந்திருந்த நான் இளையராஜாவின் அன்னக்கிளி பாடலைக் கேட்டு என் அப்பாவின் தலை முடியை பிடித்து அவரை நிறுத்தினேன்.


அன்றிலிருந்து என் குழந்தைப் பருவம் முழுவதும் இளையாஜா வியாபித்திருந்தார். இந்திய சினிமா கண்ட இரண்டு மிகப் பெரிய கலைஞர்கள் என்றால் ஒன்று இளையராஜா, இன்னொருவர் ஏ.ஆர் ரஹ்மான். இவ்வளவு பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கும்போது நான் ஏன் இசையமைக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். போர் அடிக்கிறது... ஏதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.


தாணு என்னை இந்தப் படத்திற்கு இசையமைக்க சொன்னார். நான் ஒரு இசையமைப்பாளர் இல்லை. நான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை இசையாக மாற்ற முயற்சித்திருக்கிறேன். ரொம்ப சீரியஸாக இதை நான் செய்கிறேன். இதன் மூலம் எந்த ஒரு இலக்கையும் அடைய நான் நினைக்கவில்லை. நன்றாக இசையமைத்து நான் கடைசியாக போய் சேரும் இடம் இளையராஜாவின் காலடியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்தான் என்னுடைய முதல் குரு” என்று மிஸ்கின் பேசினார்.


இயக்குநர் ராமின் குணம்


தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஸ்கின் ”இந்த நிகழ்ச்சியில் என் மனதுக்கு நெருக்கமான இரண்டு நபர்கள் இங்கு இல்லை. ஒருவர் நான் இந்த உலகத்தில் சிறந்த இயக்குநர் என்று கருதும் இயக்குநர் ராம். இன்னும் ஒரு கார் கூட அவன் வாங்கவில்லை. நான் அடிக்கடி இயக்குநர் வெற்றிமாறனிடம் கூட சொல்வதுண்டு அவனுக்கு ஒரு கார் வாங்கிக் கூடு வெற்றி என்று.


எங்கு பார்த்தாலும் சிக்ரெட் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பான். இப்போது புகைப் பிடிக்கும் பழக்கத்தையும் விட்டான். சமீபத்தில் அவனிடம் பேசியபோது இரவு ஒரு படப்பிடிப்பு இருப்பதாகவும் அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறினான்.


இன்னும் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்ர் மாதிரியே ராம் இருக்கான். இரண்டாவது நபர் தியாகராஜா குமாரராஜா. இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி சத்தியம் எல்லாம் கூட வாங்கி விட்டேன், ஆனால் கடைசி நேரத்தில் அழைத்து வரவில்லை என்று சொல்லிவிட்டான். ஒரு பூவைப் போல் மனம் கொண்டவர் தியாகராஜா குமாரராஜா” என்று மிஸ்கின் பேசினார்.