2023ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


பொதுவாகவே அரசு ஊழியர்கள், ஐ.டி. ஊழியர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நீண்ட விடுமுறைகளைத்தான். வேலைக்காக ஊரை விட்டு ஊர் வந்து சென்னையில் பணிபுரிபவர்கள் எல்லோருக்குமே ஊருக்கு சென்று வர வேண்டிய ஆசை இருக்கும். குறிப்பாக பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடினால்தான், விழா முழுமை பெற்ற உணர்வே ஏற்படும். அதனால், தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை தினங்களுக்கு சென்னைவாசிகள் ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால் பேருந்துக் கட்டணங்களின் விலை கணிசமாக உயர்த்தப்படும். ரயில்களில் கூட்டம் அலைமோதும். 


இதற்கிடையே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஞாயிற்றுக் கிழமை அன்று வருகிறது. இதனால், தமிழக அரசு அடுத்த நாளான திங்கள் கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் விடுமுறை அறிவிப்பு


இதற்கிடையே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று, அக்டோபர் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 


குறிப்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது' என்று குறிப்பிடப்பட்டது.


முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டுகோள்


எனினும் கடைசி நேர அறிவிப்பால், மக்கள் ஊரில் இருந்து சென்னை திரும்ப முடியாமல், பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில், தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும்  ஐ.டி., அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் இந்த ஆண்டாவது தீபாவளிக்கு முந்தைய நாள் அறிவிக்காமல், முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.