தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணி, தனக்கென தனி இசை பாணி என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அவரது தொடக்க காலத்தில் பாடல்களில் ஓரிரு காட்சிகளுக்கு வந்தவர், தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். 


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரலானது மட்டும் இல்லாமல் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.  விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். ரோமியோ படத்தின் புரோமஷனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பினை படக்குழு நடத்தியது. படக்குழு வெளியிட்ட ரோமியோ பட போஸ்டரில் பெண் மது பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்று உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ குடி என்றால் எல்லாருக்கும் ஒன்று தான். அதில் ஆண், பெண் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஆண்கள்  மது அருந்துவது தவறு என்றால் பெண்கள் மது அருந்துவதும் தவறுதான். மது என்பது நீண்ட காலமாகவே உள்ளது. ஜீசஸ் கூட திராட்சை ரசம் என்ற பெயரில் மது குடித்திருக்கிறார். மதுவுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பெயராக உள்ளது’ என கூறியிருந்தார். 


விஜய் ஆண்டனியின் இந்த பதில் பல கிருத்துவ மக்களையும் அதிர்ச்சியிலும் வருத்ததிலும் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கிருத்துவ சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் விஜய் ஆண்டனி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 


அதில், “நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.


ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.


மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” என குறிப்பிட்டு என தனது தரப்பு விளக்கத்தினையும் தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.