இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்து, பல பாடல்கள் பாடியும் உள்ள விஜய் ஆண்டனி சமீப காலமாக புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறார். கடைசியாக தியேட்டரில் வெளியாகி நன்றாக ஒட்டியிருக்கும் திரைப்படமான கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு அவர் தான் எடிட்டிங் செய்துள்ளார். அவர் நடிப்பில் பயங்கர ஹிட் ஆன பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே எழுதி இயக்கி வருகிறார். இது போன்று வித்தியாச அவதாரங்களில் ஈடு படுவதால் இப்போதெல்லாம் அவர் நடிக்கும் படங்களுக்கே அவர் இசையமைப்பதில்லை.


கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.


சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதுபோல் பல பெரிய கனவுகள் இருக்கும். அவை எல்லாவற்றுக்கும் மதிப்பெண்கள் வேண்டும். எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் அம்மாவை ஏமாற்றுவதற்காக சினிமாவுக்கு போகிறேன். "சினிமாவுக்கு போகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு இசை அறிவு கிடையாது. சரியாக நடிக்க தெரியாது, பேசக்கூட தெரியாது. ஆனால் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.



மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு எனர்ஜி பிறக்கும் என்று சொல்வார்களே.. அதுபோல், நான் மட்டுமே அதை நம்பிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்." என்று கூறிய விஜய் ஆண்டனி தன்னுடைய திரைப்படங்களும், இயக்குநர்களும், அவர்களுடைய கதையும், உழைப்பும்தான் தன்னுடைய வெற்றிக்கும் காரணம் என்று குறிப்பிட்டார். மேலும் பேசியவர், “இயக்குனர் சசி சார்.. பிச்சைக்காரன் கதை சொல்லும்போது ஒரு பகுதியில் அவரே அழுதார். என்னிடம் சொல்லும்போதே அப்படி அழுதார் என்றால், அவர் அந்த கதையை எழுதும்போது எப்படி எமோஷனல் ஆகியிருப்பார். அதேபோல்தான் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனும் எமோஷனலாக அந்த கதையை எழுதியிருக்கிறார்” என்று சொன்ன விஜய் ஆண்டனி, இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனை பார்த்து “உங்கள் குழந்தைக்கு டெலிவரி ஆகியுள்ளது. இதைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.


நீங்கள் தான் இந்த விழா நாயகன். அட்லீ போல், லோகேஷ் கனகராஜ் போல் நீங்களும் விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களை இயக்குவீர்கள். அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!” என்று குறிப்பிட்டிருந்தார். 



இதனைத் தொடர்ந்து, “என்னதான் ஒரு கற்பனை இருந்தாலும், அந்த கற்பனையை நம்பி, மற்றவர்களுக்குதான் புகழ் வரும் என்று தெரிந்தும், அவர்களுக்காக பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர் முக்கியமானவர். அவர்தான் அடுத்த விழா நாயகன் அவருக்கும் நன்றி.” என்று குறிப்பிட்ட விஜய் ஆண்டனி, “தயாரிப்பாளரை அடுத்து விநியோகஸ்தர்கள் முக்கியமானவர்கள். இந்த திரைப்படத்தை கொண்டுசென்று சேர்த்த அவர்களுக்கு போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்கிற கவலை, அவர்களை விட எனக்கு பத்து மடங்கு இருந்தது. நான் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. நான் இந்த படம் பண்ணுகிறேன். அடுத்த படம் பண்ணுகிறேன். ஆனால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்கிற சிந்தனை இருந்துகொண்டே இருந்தது, அவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்து மகிழ்ச்சியை கொடுத்திருப்பது தான் முக்கியமானது. எனக்கு அதில் மகிழ்ச்சி. நன்றி கமல் போஹ்ரா சார், தனஞ்செயன் சார், பங்கஜ் போஹ்ரா சார்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் விஜய் ஆண்டனி.