தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித்-விஜய் இணைந்து நடித்த படம், ஒரே படம், ராஜாவின் பார்வையிலே. தல பெருசா... தளபதி பெருசானு... இரு ரசிகர்களும் இன்று மோதிக்கொண்டிருந்தாலும், அன்று ராஜாவின் பார்வையிலே படம்வெளியான போது, தலயும் இல்ல.... தளபதியும் இல்ல. ஏதாவது ஒரு ஹிட் கிடைக்காதா என இருவரும் ஏங்கிக் கொண்டிருந்த காலம். 1995ல் ரஜினியும்-கமலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. அவர்களுக்கு அடுத்த இடத்தில் விஜய்காந்த், முரளி, சத்யராஜ் என 80's ஹீரோக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது 90ஸ். என்னதான் 90களில் அறிமுகமானாலும், தல-தளபதிக்கும் அது போராட்ட காலமே.
ராஜாவின் பார்வையிலே... யார் அந்த ராஜா?
ராஜாவின் பார்வையிலே என்பது படத்தின் தலைப்பு. படத்தில் விஜயின் கதாபாத்திரம் ராஜா. அஜித்தின் கதாபாத்திரம் சந்ரு. கதைப்படி உண்மையில் ஹீரோ விஜய் தான். அஜித் துணை ஹீரோ தான். ஆனால் விஜய் பெயரில் வரும் ராஜா தான், படத்தின் தலைப்பா என்றால், அது சந்தேகம் தான். காரணம்... படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. இசைக்கு இளையராஜாவை நாடி செல்வோர், ஏதாவது ஒரு வகையில் அவரை இம்ப்ரஸ் செய்ய படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ராஜா என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்பார்கள். அதை இளையராஜா விரும்புவாரா இல்லையா என்பது வேறு கதை. ஆனால் இயக்குனர்கள் அந்த பார்முலாவை தொடர்ந்து கடைபிடித்தே வந்தனர். அதனால் தான் 80களில் வந்த படங்களில் பெரும்பாலும் கதா நாயகர்களின் பெயர்கள் ராஜா என்று இருக்கும். இல்லையென்றால் கதாபாத்திரத்தின் பெயர்களில் ராஜா இருப்பார். பாடல் வரிகளில் ராஜா இருப்பார். அந்த வகையில் தான்... ராஜாவின் பார்வையிலேயே படத்திலும் இசை இளையராஜா என்பதால் ராஜாவின் பார்வையிலேயே என பெயர் வைத்திருக்க கூடும். சமன் செய்ய, ஹீரோவுக்கும் அந்த பேரை பயன்படுத்தியிருக்கலாம்.
அஜித்-விஜய் சம்மதிக்க....அப்படி என்ன கதை?
கதை என்று பார்த்தால் கிராமத்தில் வசிக்கும் விஜய்யை, அங்குள்ள பணக்கார பெண் விரும்புகிறார். அவளை விஜய் வெறுக்கிறார். அவர் காதலை மறுக்கிறார். ஒரு கட்டத்தில் காரணம் கேட்கிறாள் அந்த பெண். பிளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது. ஒரே அறையில் நண்பர்களாக இருக்கும் விஜய்-அஜித். பஸ்ஸில் வரும் பெண்ணை காதலிக்கிறார் அஜித். அந்த பெண்ணும் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் வீட்டில் சொல்லும் மாப்பிள்ளையை அந்த பெண் திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் மனமுடைந்த அஜித் தற்கொலை செய்து கொள்கிறார். நண்பனின் மரணத்திற்கு காரணமான காதலை வெறுக்கிறார் விஜய். இறுதியில் மனம் மாறும் விஜய், பணக்கார பெண் வீட்டார் தரும் சிரமங்களை கடந்து காதலியை கரம் பிடிப்பதே ராஜாவின் பார்வையிலே. தொடர்ந்து தனது சொந்த கம்பெனியில் நடித்து வந்த விஜய்க்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. வேறு தயாரிப்பாளர் படத்தில் நடிக்க விரும்பினார். அஜித்... வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த காலகட்டம். அப்படி தான் அவர்களை வந்தடைந்தது ராஜாவின் பார்வையிலே.
வடிவேலு...ஜனகராஜ்... சாருஹாசன்... அடேங்கப்பா எத்தனை பட்டாளம்!
ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்-விஜய் நடித்ததாலோ என்னவோ அவர்களை கடந்து அந்த படத்தில் நடித்த பிறரை அடையாளம் காட்டாமலே கடந்து விட்டது காலம். ராஜாவின் பார்வையிலே படத்தில் இன்னும் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். வைகைப்புயல் வடிவேலு, ஜனகராஜ், வடிவுக்கரசி, சாருஹாசன், குமரிமுத்து, வெண்ணிறஆடை மூர்த்தி, சிங்கமுத்து என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கதாநாயகிகளாக இந்திரஜா, காயத்ரி நடித்திருந்தனர். காயத்ரி யார் தெரிகிறதா...? மெட்டி ஒலியில் வந்தாரே... அதான் இப்போ ரோஜா சீரியலில் அர்ஜூன் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறாரே அதே கல்பணா தான். அஜித் காதலித்த பெண் அவர் தான். இப்படி எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், அஜித்-விஜய் என்கிற இரு துருவங்களை கடந்து ராஜாவின் பார்வையிலே படத்தை வேறுநபரை கொண்டு அடையாளப்படுத்த முடியவில்லை.
விஜய் கையை பிடித்த அஜித்... கடந்தது 26 ஆண்டுகள்!
1995 ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான ராஜாவின் பார்வையிலே திரைப்படம், இன்றோடு 26 ஆண்டுகளை கடக்கிறது. இன்னும் பேசப்படுகிறது என்றால்... அதற்கு காரணம் அதில் நடித்த விஜய்-அஜித் தான். படத்தின் போஸ்டரில் ஒரு காட்சி இருக்கும். விஜய் கரத்தை பிடித்துக் கொண்டு அஜித் நடந்து செல்வார். படத்தின் கதைப்படி, அஜித் காதலிக்கும் பெண், அவரை ஏமாற்றிவிடுவார். அதை வைத்து அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் சிலர், அஜித்தை கேலி செய்து, அதை பிரச்னை ஆகி, அஜித்தை குரூப்பாக தாக்கி விடுவர். இதை அறிந்த விஜய், அஜித்திற்காக அவர்களிடம் சண்டை செய்வார். அதற்கு முன்பாக அந்த கும்பல் யார் எனக்கேட்டு அஜித் சட்டையை பிடிப்பார் விஜய். அந்த நட்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் கையை அஜித் பிடித்துச் செல்வது போல ஒரு போஸ்டர். அந்த போஸ்டருடன் தான் படம் வெளியானது. அன்று அஜித்திற்காக விஜய் சண்டையிட சென்றார். இன்று விஜய்-அஜித் ரசிகர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தான் மாறியிருக்கிறது காலம். இன்னும் ஒவ்வொரு ஆண்டும் ராஜாவின் பார்வையிலே பற்றி பேசுவார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள். காரணம்... இணைய முடியாத தூரத்தில் நிற்கும் இரு துருவங்கள் நடித்த படம். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஒருபடம் நடிக்கும் வரை ராஜாவின் பார்வையிலேயே... கொண்டாடப்படுவதை யாரும் தவிர்க்க முடியாது!
இது தான் ராஜாவின் பார்வையிலே டீம்...!
தயாரிப்பு: ஸ்ரீ மாசாணி அம்மன் மூவிஸ்
தயாரிப்பாளர்: எஸ்.செளந்திரபாண்டியன்
கதை, இயக்கம்: ஜானகி செளந்தர்
ஒளிப்பதிவு: லோகநாத பிரசாத்
இசை: இளையராஜா
படத்தொகுப்பு: எம்.என்.ராஜா