தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் நடிகை நயன் தாராவிற்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இருவரும் அவ்வப்போது ஜோடியாக படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 18ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இருவரும் துபாயின் புர்ஜ் கலிஃபாவின் முன் நிற்பது போன்ற படங்கள் வெளியாகின.
இந்நிலையில் நடிகையும் தன்னுடைய மனைவியுமான நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், “உன்னுடன் நான் கொண்டாடும் 8வது பிறந்தநாள் இது தங்கமே. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் நீ மிகவும் அழகாக மாற்றி வருகிறார். எனக்கு எது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உனக்கு தெரியும். இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாளாக அமைந்தது. என்னுடைய காதலியாக இருப்பதற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் நம்முடைய காதல் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பெற்றோர்கள் காவல்துறையை சேர்ந்த நிலையில், நடிகராகும் ஆசையில் சிவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரீ ஆனார் விக்னேஷ் சிவன். ஆனால் காலம் அவரை இயக்குநராக்கி அழகு பார்த்தது. சிம்பு, வரலட்சுமி நடித்த “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். விஜய்யின் துப்பாக்கிக்கு எதிராக ரிலீசான போதும் கலவையான விமர்சனங்களையே அப்படம் பெற்றது.
தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன கேரக்டரில் வந்த விக்னேஷ் சிவன், அதன் மூலம் தனுஷூடன் ஏற்பட்ட நட்பின் மூலம், அவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் கீழ் “நானும் ரௌடி தான்” படத்தை எடுத்தார்.விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இப்படமே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த இடமாகவும் அமைந்தது.
அடுத்ததாக சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகளில் ஒரு எபிசோடு, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய 5 படங்களை மட்டுமே இந்த 10 வருடத்தில் இயக்கியுள்ளார். அதேசமயம் பாடலாசிரியராக வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, ரெமோ, கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, தானா சேர்ந்த கூட்டம், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார்.
இதற்கிடையில் 7 வருட காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, நயன்தாராவை இந்தாண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின் பல இடங்களுக்கு டூர் சென்ற இந்த ஜோடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்வித்தனர்.