உணவு, ஓய்வு மற்றும் இனப்பெருக்கம் ஆகிய மூன்றும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. சரியான நேரத்தில் தேவைப்படும் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு,அல்சர்,வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,உடல் மெலிந்து போவது மற்றும் உடல் பருமன் பிரச்சினைகள் ஏற்படும்.


 இதைப் போலவே ஓய்வு எனப்படும் மனிதனின் தூக்கமானது உள் உறுப்புகளுக்கும் மனதிற்கும் மிக மிக தேவையான ஒன்றாகும். ஒரு மனிதன் இரவில் குறைந்தது 6 மணி நேரம் முதல்  8 மணி நேரம்  வரை அவசியம் உறங்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.


 இதிலும் குறிப்பாக இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரையிலான நேரம் தூக்கத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். இப்படியான இரவு தூக்கத்தின் போது மட்டுமே உள்ளுறுப்புகள், எலும்பு மூட்டுகள் மற்றும் ஏனைய சுரப்பிகள் என அனைத்தும் ஓய்வு எடுத்து மறுநாள் காலை உற்சாகமாக வேலையை செய்யத் தொடங்கும். 


இவ்வாறு இரவு தூக்கத்தை தவிர்ப்பதினால் மனச்சோர்வு,சர்க்கரை நோய் பாதிப்பு, பதற்றம், ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பு என எண்ணில் அடங்கா நோய்கள் நம் உடலை தாக்குகின்றன. இரவில் தூங்காமல் இருப்பதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகம் முழுவதிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


இதன்படி இரவில் சரியாக உறங்கும் நபர்கள் மற்றும் இரவில் உறங்காத நபர்களை கொண்டு ஒப்பீட்டளவில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் கீழ்க்கண்ட முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.


இரவில் தூக்கமின்மையால் இதய நோய் மற்றும்  டைப் 2  நீரிழிவு நோய்  ஏற்படுவதாக  தெரியவந்துள்ளது. இரவில் 
தூங்காமல் இருப்பவர்களுக்கு  உடல் பருமன் அதிகரிப்பு, கொழுப்பை உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் திறன் வெகுவாக குறைகிறது என ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கிறது.


இதேபோல உடலின் ஓய்வற்ற தன்மை மற்றும் உறக்க சுழற்சி மாறுபாடு போன்றன உடலில்  இன்சுலின் சுரப்பில் வேறுபாடுகளை ஏற்படுத்தி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறது . சரியான அளவு தூக்கம் இல்லாத நபர்களுக்கு ரத்த அழுத்தம்,ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது, மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


சரியாக தூக்கம் இல்லாத நபர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம்  பாதிக்கப்படுகிறது. இதன்படி  சரியான தூக்கம் இல்லாத போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது தடுக்கப்படுகிறது. 


இதனால் சரியாக தூக்கம் இல்லாத நபர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் வெகுவாக குறைகிறது. காலப்போக்கில் அதிகளவிலான தொற்று நோய்கள் இவ்வாறான காரணங்களால் சீக்கிரமாகவே மனிதர்களுக்கு ஏற்படுகிறது.


  சரியாக தூக்கம் இல்லாத நபர்களுக்கு கிளினிக்கல் டிப்ரஷன் எனப்படுகின்ற மன அழுத்த நோய் வருவதை தவிர்க்க இயலாது எனக் கூறப்படுகிறது. இதனால் எப்போதும் படபடப்பு, சோர்வு செய்யும் வேலையில் கவன சிதறல் ஏற்படுவதை காண முடிகிறது. அதேபோல் மன அமைதியின்மை ஏற்பட்டு சுற்றி இருப்பவர்களிடம் எரிச்சலோடும், கோபத்தோடும் பழகும் தன்மையும் ஏற்படுகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.


ஆகவே இரவில் உரிய நேரத்தில் தூங்கி காலையில் சீக்கிரமாக விழித்தெழுந்து புத்துணர்ச்சியுடன் நாம் செயலாற்றும்போது, மூளை ,உடம்பின் உள்ளுறுப்புகள் , ஏனைய சுரப்பிகள் போன்றன சிறப்பாக செயலாற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.