வித்யுத் ஜம்வால்


ஃபிட்டான உடல், பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் வித்யுத் ஜம்வால் (Vidyut Jammwal). ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தியில் இவர் நடித்த கமாண்டோ, ஆக்‌ஷன் பட வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே 23’ படத்தில் நடித்து வருகிறார்.


வித்யுத் ஜம்வால் தான் கடைசியாக நடித்த IB71 மற்றும் crakk ஆகிய இரு படங்களைத் தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தன. IB71 படம் ரூ.40 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு ரூ.29 கோடிகளை மட்டுமே வசூல் செய்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான Crakk படம் ரூ.45 கோடிகளில் எடுக்கப்பட்டு ரூ.17 கோடிகளை மட்டுமே வசூலித்தது. இந்த இரு படங்களின் தோல்வியால் தான் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டதையும் அதிலிருந்து தான் மீண்டு வந்ததையும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் வித்யுத் ஜம்வால்.


சர்க்கஸில் சேர்ந்த வித்யுத் ஜம்வால்.


சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் பேசிய வித்யுத் ஜம்வால் தொடர்ச்சியான தோல்விகளை தான் எதிர்கொண்ட விதத்தைப் பற்றி பேசினார். “என்னுடைய படத்தின் தோல்வியால் நான் நிறைய பணத்தை இழந்திருந்தேன். இதில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பது தான் ஒரே கேள்வியாக இருந்தது. நாம் தோல்வியடையும்போது நம்மைச் சுற்றி நம் மேல் அக்கறை வைத்திருப்பவர்கள் நிறைய ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்த ஆலோசனைகளை எல்லாம் விட்டு நான் விலகி இருக்க முடிவு செய்தேன்.


கிராக் படத்தின் தோல்விக்குப் பிறகு நான் ஒரு பிரெஞ்சு சர்க்கஸ் குழுவுடன் 14 நாட்களை செலவிட்டேன். அங்கு ஒரு Contortionist ( உடலை பலவிதமாக வளைக்கத் தெரிந்த கலைஞர்) உடன் நேரம் செலவிட்டேன். அவர் செய்வதை எல்லாம் பார்த்தபோது நான் என்னை ரொம்ப சின்ன மனிதனாக உணர்ந்தேன். அங்கிருந்து நான் திரும்பி வந்த போது நிலைமை ஓரளவுக்கு அமைதியாகி இருந்தது. முதல் வேளையாக நான் அடுத்த என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்தேன். நான் நிறைய பணத்தை இழந்திருக்கிறேன் ஆனால் அது பெரிதும் என்னை பாதிக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். நிதி நெருக்கடிகளை சமாளிக்க முறையாக திட்டமிட்டேன். அடுத்த மூன்று மாதங்களில் என் கடன்களை தீர்த்தேன்" என்று வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.


எஸ்.கே 23


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் எஸ்.கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், விக்ராந்த், ஷபீர், பிஜூ மேனன் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.