வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை முதல் பாகம் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை அள்ளி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இந்நிலையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் தேங்க்ஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஏப்.06) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சூரி பேசியதாவது: 


"ராஜீவ் மேனன் என்னை புகழ்ந்து பேசினார் ஆனால் இப்போதும் எனக்கு புரியவில்லை. அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இந்த நிகழ்வு மறக்கமுடியாத நிகழ்வு. படத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் தான். 


எவ்வளவு நன்றி சொன்னாலும் அது பத்தாது. படம் வெளியான போது நான் என்னுடைய குல சாமியை கும்பிட்டுக் கொண்டு இருந்தேன். நிறைய போன் வந்தது. என்னால் எடுக்க முடியவில்லை.  நேற்று இரவு 5 மணி வரை கால் வந்து கொண்டே இருந்தது. ‘தற்கொலை படை மாமா...’ ’உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன்...’ என்று சொல்லி எல்லாம் போன் வந்தது.


உதயநிதி போன் செய்தார். படம் நன்றாக உள்ளது. “ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளீர்கள் அது தெரிகிறது சிறப்பாக உள்ளது” என்றார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். 


விஜய் சேதுபதி உனக்கு இருக்க பக்குவம் அணுகுமுறை தான் இந்த நிலையில் நீ இருக்கிறாய். உன்னிடம் இருந்து தான் அதை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஹீரோ சக நடிகனை ஊக்குவித்தால் நன்றாக நடிப்பார்கள். அதை விஜய் சேதுபதி செய்தார்” என கண் கலங்கிய படி அனைவருக்கும் சூரி நன்றி சொன்னார்.


தொடர்ந்து பேசிய சூரி, வெற்றி சார் படம் வாய்ப்பு கிடைச்சிருக்கு பார்த்து கவனம் என பலர் சொன்னார்கள்... எத்தன நாள் இருக்கு எக்ஸாம் முடியலயா எனக் கேட்பார்கள்... 20 நாள் ஷூட்டிங் ஷூட்டிங்னு எல்லாரிடமும் சொல்லி செல்வேன். என் வீட்டிலும் எல்லாரும் ஜாலியா கிண்டல் செய்வார்கள். எத்தனை நாள் படம் எடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை.  படம் எப்படி வருது என்பதுதான் முக்கியம்” எனக் கூறிச் சென்றார்.


அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சேத்தன், "எப்போதுமே சினிமாவில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் வெற்றி படத்தில் இருக்க வேண்டும். வெற்றிமாறன் படத்திலும் இருக்க வேண்டும்.


பல முயற்சிக்கு பிறகு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. சூரி சூப்பராக நடித்துள்ளார்” எனப்பேசினார்.