விடுதலை பாகம் 1 திரைப்படம் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி ட்வீட் செய்துள்ள நிலையில், நடிகர் சூரி அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.


பாராட்டிய ரஜினிகாந்த். நெகிழ்ந்த சூரி


விடுதலை படத்தின் சிறப்புக் காட்சியை முன்னதாக பார்த்து ரசித்து நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி என அனைவரையும் உச்சிமுகர்ந்து பாராட்டியிருந்தார்.


“விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம், இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை.  இளையராஜா இசையில் என்றும் ராஜா. இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.


’என் கால் தரையில் இல்லை'


இந்நிலையில் முன்னதாக ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூரி ட்வீட் செய்துள்ளார்.


“என்ன சொல்றதுன்னே தெரியல தலைவரே... நெஞ்சார்ந்த நன்றிகள் .. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த், சூரி இருவரது இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.




விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில்,  முதல் பாகம் சென்ற மார்ச் 31ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி 8 நாள்களைக் கடந்துள்ள நிலையில்  அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் தொடர்ந்து விடுதலை படத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


விடுதலை வசூல் நிலவரம்


சூரி, விஜய் சேதுபதி மையக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், பவானி ஸ்ரீ, சேத்தன், தமிழ் ராஜீவ்மேனன், கௌதம் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இந்தியா முழுவதும் விடுதலை படம் கடந்த 8 நாள்களில் 22.65 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் விடுதலை படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


படக்குழுவினர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நிலையில்,  ஒருபுறம் விடுதலை படத்தின் கதை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், சோளகர் தொட்டி நாவல் ஆகியவற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்ற்ச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


விஜய் சேதுபதியின் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Actor Prashanth: பிரசாந்த் வீழ்ச்சிக்கு திருமணம்தான் காரணம்...ஆனா விஜய், அஜித்தைவிட ஓஹோனு இருக்கார்... ஜோடி பட இயக்குநர் பிரவீன் காந்தி பளிச்!